சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸினால் ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை குறைந்தது 106 ஐ எட்டியுள்ளது. மேலும், இந்த வைரஸ் 4,515 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்றியுள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு வரைபடம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), உலக சுகாதார அமைப்பு, சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்துடன் பிற மூலங்களிலிருந்து தரவைப் பயன்படுத்தி குறித்த அறிக்கைகளைக் கண்காணித்து ஒரு வலைதளத்தில் காட்சிப்படுத்துகிறது.
அறிக்கைகள் வரும்போது, உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நிகழ்வுகள், மொத்த இறப்புகள் மற்றும் மொத்த மீட்புகளை இந்த வரைபடம் கண்காணிக்கும். ஒவ்வொரு சிவப்பு புள்ளியும் இந்த வைரஸ் பரவிய இடத்தைக் குறிக்கிறது. இந்த புள்ளியின் அளவு நோயின் பரவலின் ஒப்பீட்டு அளவோடு தொடர்புடையது. சிவப்பு புள்ளி ஒன்றை அழுத்துவதன் மூலம் அந்த பிராந்தியத்தின் தகவல் காட்டப்படுகிறது.

பீதி மற்றும் குழப்பத்தில், தவறான தகவல்கள் விரைவாக பரவக்கூடும். இதுபோன்ற குழப்பத்தில் சீனா அதன் ஆரம்ப நாட்களில் நோய் குறித்த தகவல்களை தவறாக அறிவித்ததாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் குறித்து “உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லாமல் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிடுவது அல்லது அனுப்பியது” என்று குற்றம் சாட்டப்பட்டு சீனாவில் குறைந்தது எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். வைரஸ் குறித்து புகார் அளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த வலைதளத்திலுள்ள ஒரு விளக்கப்படம், உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் வைரஸ் எவ்வளவு விரைவாக பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதுவரை, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை உத்தியோகபூர்வ மொத்தத்தை விட மிக அதிகம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த கொரோனா வைரஸ் SARS நோயை விட ஆபத்து குறைந்ததாக இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் குறைந்தது 13 நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் 41 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
வலைதளத்தின் முகவரி இங்கே : https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6