உங்கள் உடலில் வித்தியாசமான மாற்றங்களை ஏற்படுத்தும் சில உணவுகள்! பாகம்-1

அதிகமாக காரட் உட்கொண்டால் உங்கள் தோல் செம்மஞ்சள் நிறமாக மாறும்

காரட்டில் பீட்டா கரோட்டின், ஆரஞ்சு-சிவப்பு நிறமி அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகமாக சாப்பிடுவதால் கரோட்டினீமியா (Carotenemia) எனப்படும் நிலைமை ஏற்படலாம். இது சருமத்திற்கு ஆரஞ்சு நிறத்தை கொடுக்கிறது. உள்ளங்கைகள், பாதங்கள் மற்றும் நீங்கள் சிரிக்கும் போது உங்கள் முகத்தில் ஏற்படும் கோடுகள் ஆகியவற்றில் வண்ணம் அதிகமாகத் தெரியும் என்று ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவ கிளினிக் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இது மிகவும் பொதுவான ஒரு நிலைமை அல்ல. இதுபோன்ற ஒரு மாற்றத்தை கவனிக்க நீங்கள் முழுமையாக இரண்டு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 கேரட் வரை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழங்கள் வயிறு உப்புதலைக் (Bloating) குறைக்கின்றன

சமீபத்தில் உங்கள் வயிறு சற்று உப்பியிருப்பதாக உணர்ந்திருந்தால் உங்கள் காலை சாப்பாட்டோடு ஒரு வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ஆய்வில், வெறுமனே தண்ணீர் அல்லது வாழை சுவை கொண்ட பானத்தை பருகியவர்களை விட ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்ட பெண்களில் வயிறு உப்புதல் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இது உடலின் சோடியத்தை சமப்படுத்த உதவுகிறது.

கருப்பு நிற சாக்லேட் மன அழுத்தத்தை குறைக்கிறது

சாக்லேட் மேல் நாம் விருப்பம் கொள்ள நமக்கு இன்னொரு காரணமாக அமைவது இது மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். கருப்பு சாக்லேட்கள் நம் உடலில் கார்டிசோல் ஹார்மோனைக் குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாக்லேட் மனநிலை, நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

அமிலச் சாறுள்ள பழங்கள் சிறுநீர் கழித்தலை அதிகரிக்கும்

ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் க்ளெமெண்டைன்கள், அன்னாசிப்பழம் மற்றும் தக்காளி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. அதாவது, அவை உங்கள் சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யும் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை அதிகப்படுத்தும்.

கொத்தமல்லி உங்கள் சமிபாட்டுத் தொகுதியை சீராக்கும்

நீங்கள் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியால் அவதிப்படுகிறீர்களா? குடல் சம்பந்தமான நோயாளிகள் மாத்திரைக்கு மாறாக, கொத்தமல்லியை தங்கள் உணவுகளில் சேர்ப்பதன் மூலம் அந்நோய்க்கு நிவாரணம் பெற முடிந்தது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் எமது உடலிற்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி அடுத்த பாகத்திலும் பார்ப்போம்.