ஒவ்வொரு வருடமும் குறைந்தது 74,000 நுண்பிளாஸ்டிக் துகள்களையாவது நீங்கள் உட்கொள்கிறீர்கள்!

பூமியில் உள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும், உதாரணமாக கடலில் உள்ள ஆழமான வெடிப்புகளிலிருந்து நிலத்தில் மிகவும் தொலைவான வனப்பகுதி வரை மனிதர்கள் நுண்பிளாஸ்டிக்கை பரப்பியுள்ளனர். இன்று அதனை இல்லை என்று நிராகரிக்க எங்குமே இடமில்லை. ஒவ்வொரு ஆண்டும், மனிதர்கள் நம் சொந்த தவறை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.

காற்று, உணவு, நீர் ஆகியவற்றில் உள்ள நுண்பிளாஸ்டிக்கை பற்றி நாம் அறிந்திருக்கும் சிறிய அளவிலிருந்து கனேடிய ஆய்வாளர்கள், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 74,000 துகள்களை நாம் நுகர்கின்றோம் என கண்டுபிடித்துள்ளனர்.

தரவு இல்லாமை காரணமாக, மீன், சர்க்கரை, உப்பு, மது, குழாய் அல்லது பாட்டில் தண்ணீர், நாம் சுவாசிக்கும் காற்று போன்றவற்றை உள்ளடக்கிய சில வகைகளில் மட்டுமே ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 26 விசேடமான ஆய்வுகள் உட்பட பல ஆய்வுகளின் முழுமையான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குழு நுண்ணிய தரவுத்தளத்தை உருவாக்கியது. அதை அவர்கள் அமெரிக்க உணவுத் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இதன் மூலம் ஒரு நபரின் வயது மற்றும் பாலினத்தை பொறுத்து, ஒவ்வொரு வருடமும் நுகரப்படும் நுண்பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கை 74,000 மற்றும் 121,000 துகள்களுக்கு இடையில் நுகரப்படுகிறது என கணிக்கப்பட்டுள்ளது.

தரவுத்தளத்தில் உள்ள அனைத்து பொருட்களில் காற்று, பாட்டில் நீர், மற்றும் கடல் உணவு பெரும்பாலான நுணிபிளாஸ்டிக்கை கொண்டுள்ளது. இது உங்கள் இடம் மற்றும் உட்கொள்ளும் உணவைப் பொறுத்து மாறுபடுகிறது. எனவே இந்த நுண்பிளாஸ்டிக் கடல் மற்றும் நிலப்பகுதிகளை மட்டுமல்லாமல் நாம் உட்கொள்ளும் உணவு, நீர் என்பவற்றையும் பாதிக்கின்றது.

முடிவுகள் முதலில் பயங்கரமானதாக இருக்கின்றபோதிலும், அடிப்படை தரவுகளில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் இந்த முடிவுகளை, சராசரியாக அமெரிக்காவின் தினசரி உணவு நுகர்வு அடிப்படையிலும், உட்கொள்ளும் உணவின் கலோரியில் 14 சதவீதத்தையும் மட்டும் அடிப்படையாக கொண்டே மதிப்பிட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்று நுண்பிளாஸ்டிக்கின் விளைவுகள் பெரும்பாலும் அறியப்படாதவை. கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு ஆய்வில் உலகெங்கிலும் மனித மலத்தின் மாதிரிகளில் உள்ள நுண்பிளாஸ்டிக்கள் பற்றிய ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

உடலுக்கு தீங்கு விளைவதற்கு சாத்தியமான வழிமுறைகள் பல உள்ளன. இவற்றில் விஞ்ஞானிகளால் ஒரு சில மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது. நுண்பிளாஸ்டிக் குடலில் நுழைந்தவுடன், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அல்லது புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்களை வெளியிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலைமை நாம் சுவாசிக்கும் காற்று மூலம் நமது சுவாசப்பைக்கும் ஏற்படலாம்.

நாம் நுண்பிளாஸ்டிக் உட்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்றால், முதலில் பாட்டில் தண்ணீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். குழாய் தண்ணீரை விட பாட்டில் தண்ணீரிலேயே அதிகமான நுண்பிளாஸ்டிக்கள் உள்ளன.

எனினும், அனைத்து சாத்தியக்கூறுகளிலும் பார்க்கும்போது, பாட்டில் தண்ணீரை தவிர்ப்பது ஒரு சிறு துளி போன்ற விடயமாகும். இன்னும் பல ஆராய்ச்சிகளை செய்வதன் மூலம் மேலும் எந்த உணவுகளில் நுண்பிளாஸ்டிக்கள் அதிகமாக உள்ளதென்பதை அறிந்து அவற்றை நாம் விலக்கிக் கொள்ளலாம். இதற்கான ஆராய்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இன்னுமொரு தீர்வாக நாம் இப்பொழுதே கடைபிடிக்கக் கூடியது பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை குறைப்பதாகும். இதன் மூலம் மனிதர்க்கு மட்டுமல்லாது நமது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.