ஆலிவ் எண்ணெயின் 5 நிரூபிக்கப்பட்ட நன்மைகள்

உணவுக் கொழுப்பின் ஆரோக்கிய விளைவுகள் சர்ச்சைக்குரியவை. இருப்பினும் ஆலிவ் எண்ணெய், குறிப்பாக எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் உங்கள் உடம்புக்கு நல்லது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். விஞ்ஞான ஆராய்ச்சியால் ஆதரிக்கப்படும் ஆலிவ் எண்ணெயின் 5 ஆரோக்கிய நன்மைகள் இதோ.

1. ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான நிரம்பாத கொழுப்பைக் கொண்டது

ஆலிவ் எண்ணெய் ஆலிவ் மரத்தின் பழத்திலிருந்து எடுக்கப்படும் இயற்கையான எண்ணெய் ஆகும். இதில் சுமார் 14% நிறைவுற்ற கொழுப்பு மற்றும் 11% செறிவூட்டப்பெற்ற கொழுப்பு அதாவது ஒமேகா -6 மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. ஆனால், ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய கொழுப்பு அமிலம் ஒலிக் அமிலம் (Oleic Acid) எனப்படும் ஒரு நிரம்பாத கொழுப்பு ஆகும். இது மொத்த எண்ணெய் உள்ளடக்கத்தில் 73% ஆகும்.

ஒலிக் அமிலம் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் புற்றுநோயுடன் இணைக்கப்பட்ட மரபணுக்களில் நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிரம்பாத கொழுப்புகள் அதிக வெப்பத்தை எதிர்க்கின்றன. இந்த நன்மை, எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெயை சமைப்பதற்கு ஆரோக்கியமான தேர்வாக ஆக்குகிறது.

2. ஆலிவ் எண்ணெய் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டைக் கொண்டுள்ளது

எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் மிகவும் சத்தானதாகும். அதில் நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்களைத் தவிர, குறைந்த அளவு வைட்டமின்கள் E மற்றும் K யும் உள்ளன.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவை. இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். ஆலிவ் எண்ணெயில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட்கள் காணப்படுகிறன. அவை உயிரியல் ரீதியாக சுறுசுறுப்பானவை, மேலும் நாள்பட்ட நோய்களுக்கான ஆபத்தை குறைக்கின்றது. அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன, மேலும் உங்கள் இரத்தக் கொழுப்பை ஆக்ஸிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைகின்றது.

3. ஆலிவ் எண்ணெய் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

புற்றுநோய், இதய நோய், வகை 2 நீரிழிவு நோய், அல்சைமர், கீல்வாதம் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களுக்கு நாள்பட்ட அழற்சி ஒரு முன்னணி இயக்கி என்று கருதப்படுகிறது. எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கிறது. இது அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

முக்கிய அழற்சி எதிர்ப்பு விளைவுகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் மத்தியஸ்தம் செய்யப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ஓலியோகாந்தல் (Oleocanthal) ஆகும். இது இப்யூபுரூஃபன் (Ibuprofen) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்து போலவே செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில விஞ்ஞானிகள் 3.4 தேக்கரண்டி (50 மில்லி) எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலியோகாந்தால், 10% இப்யூபுரூஃபனின் வயது வந்தோருக்கான அளவைப் போலவே விளைவைக் கொண்டிருப்பதாக மதிப்பிடுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய கொழுப்பு அமிலமான ஒலிக் அமிலம் சி-ரியாக்டிவ் புரதம் (CRP) போன்ற அழற்சி ஏற்படுத்துவனவற்றின் அளவைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. ஒரு ஆய்வில் ஆலிவ் ஆயில் வீக்கத்தை உண்டாக்கும் சில மரபணுக்கள் மற்றும் புரதங்களைத் தடுக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

4. ஆலிவ் எண்ணெய் பக்கவாதத்தை தடுக்க உதவுகிறது

இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு காரணமாக உங்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. வளர்ந்த நாடுகளில், பக்கவாதம் என்பது இதய நோய்க்குப் அடுத்து இறப்புக்கான இரண்டாவது பொதுவான காரணமாக இருக்கின்றது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பக்கவாத நோய் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 841,000 பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆய்வில் பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் குறைவான ஆபத்துடன் தொடர்புடைய நிரம்பாத கொழுப்பின் ஒரே ஆதாரமாக ஆலிவ் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. மற்றொரு மதிப்பாய்வில், 140,000 பங்கேற்பாளர்களில் ஆலிவ் எண்ணெயை உட்கொண்டவர்கள் பக்கவாதம் ஏற்படுவதற்கு குறைவான ஆபத்தில் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டது.

5. ஆலிவ் எண்ணெய் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

உலகில், மரணத்திற்கு இதய நோய் மிகவும் பொதுவான காரணம் ஆகும். சில தசாப்தங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அவதானிப்பு ஆய்வுகள், மத்தியதரைக் கடல் நாடுகளில் இதய நோய் குறைவாகவே காணப்படுகிறது என்று கண்டறிந்தது. இது மத்திய தரைக்கடல் உணவைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த ஆராய்ச்சியில், தற்காலத்தில் இதய நோய் அபாயம் கணிசமாகக் குறைந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் அவர்களின் உணவில் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். இது இதய நோய்களிலிருந்து பல வழிகளில் பாதுகாக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பான LDL கொழுப்பை உடலில் சேர விடாமல் பாதுகாக்கிறது. மேலும், இது உங்கள் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான இரத்த உறைதலைத் தடுக்க உதவுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், ஆலிவ் எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் அகால மரணத்திற்கான வலுவான ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். ஒரு ஆய்வில், ஆலிவ் எண்ணெய் இரத்த அழுத்த மருந்துகளின் தேவையை 48% குறைத்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பல ஆய்வுகள் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் உங்கள் இதயத்திற்கு சக்திவாய்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றன.

எனவே நாம் எமது அன்றாட உணவுகளில் முடிந்தளவு மற்றைய எண்ணெய்களைக் குறைத்து ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக் கொள்வோம்.