LED தொலைக்காட்சி (TV) எவ்வாறு இயங்குகிறது?

LED என்பது ஒளி உமிழும் டையோட்டை குறிக்கிறது, மற்றும் LED திரை என்பது ஒரு வகையான கணினியின் மானிட்டர் திரை போன்றவொரு திரை ஆகும். ஆனால், இங்கு ஒளி மூலமானது ஒளி உமிழும் டையோட்களைக் கொண்டுள்ளது.

இது இன்று மிகவும் பிரபலமான தொழில்நுட்பமாகும். ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், கணினி மானிட்டர்கள் மற்றும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் LED காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது பிரதான காட்சித் திரையாக மட்டுமல்லாமல், தொடுதிரை போன்றும் செயற்பட்டு பயனருக்கும் சாதனத்திற்கும் இடையிலான தொடர்பு ஊடகமாகவும் பயன்படுகிறது.

LED இன் வரலாறு

1907 ஆம் ஆண்டில் கேப்டன் ஹென்றி ஜோசப் ரவுண்ட் என்பவர் ஒரு திட நிலை டையோடு உமிழும் ஒளியின் முதல் நிகழ்வை பதிவு செய்தார். இது இன்றைய காலத்தில் பல மின்னணு சாதனங்களுக்கு பயன்படும் ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்றாலும், அந்த நேரத்தில் இதன் பயன்பாடு நடைமுறையில் காணப்படவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள ஒளி உமிழும் டையோடு 1962 ஆம் ஆண்டில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய ஜூனியர் நிக் ஹோலோனியாக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1960 களில், LEDக்கள் வணிக ரீதியாகக் கிடைத்தன, இருப்பினும் அவை சிவப்பு நிறத்தில் மட்டுமே கிடைத்தன. பின்னரே அவை பல வண்ணங்களை உமிழக்கூடிய டையோடுகளாக மாற்றம் பெற்றன.

LED தொலைக்காட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

LED தொலைக்காட்சி என்பது ஒரு சிறப்பு வகையான LCD தொலைக்காட்சி ஆகும். இங்கு பின்னொளியை உருவாக்க (Backlight) CCFL விளக்குகளுக்கு பதிலாக LEDக்கள் காணப்படுகின்றன. இதுவே LED டிவி தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதன் முக்கிய கரு ஆகும். இந்த தொலைக்காட்சிகள் CCFL தொலைக்காட்சிகளைக் காட்டிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் சிறியவையாகவும் இருக்கின்றன. LED தொலைக்காட்சிகள் மற்ற வகை தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மெல்லியதாக தயாரிக்கப்படக் கூடியவை.

LED தொலைக்காட்சிகள் பெரும்பாலும் ஒரு பெரிய கண்டுபிடிப்பு மற்றும் ஒரு புதிய வகையான தொலைக்காட்சி எனக் கூறப்பட்டாலும், அவற்றின் பின்னொளி LED விளக்குகளைக் கொண்டிருப்பதைத் தவிர LCD தொலைக்காட்சித் திரைக்கும் LED தொலைக்காட்சித் திரைக்கும் தரத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லை.

பொறியாளர்கள் திரை முழுவதும் LED விளக்குகளாலான தொலைக்காட்சித் திரைகளை வடிவமைத்துள்ளனர். இந்த தொலைக்காட்சிகள், LCD இல் காணப்படும் திரவ படிகமல்லாமல் மாறாக ஒளி உமிழும் டையோட்டுக்களை கொண்ட பிக்சல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிக்சலிலும் 3 தனிப்பட்ட எல்.ஈ.டிக்கள் உள்ளன; சிவப்பு, பச்சை மற்றும் நீலம். இத்தகைய தொலைக்காட்சிகள் LCD தொலைக்காட்சிகளை விட சிறந்த தரம் வாய்ந்தவை.

LED விளக்குகள் நேராக திரையின் பின்னால் இருந்து ஒளியைப் பிரகாசிப்பதால் திரையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வெளிச்சத்தில் காட்சிகளைக் காட்டுகின்றது. LEDக்களை உடனடியாக இயக்கலாம் மற்றும் அணைக்க முடியும் என்பதால், அவை இருண்ட காட்சிகளில் அற்புதமான கருப்பு நிலைகளை உருவாக்குகின்றன. இதனால் அந்த பகுதிகளில் விளக்குகள் எரியாமல் பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படுகின்றது, அதேவேளை காட்சிகளும் உயிரோட்டமானதாக இருக்கின்றது.

OLED தொலைக்காட்சிகளை உருவாக்க இதே போன்ற தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை செயற்கையான டையோட்கள் அல்லாமல் கரிம ஒளி உமிழும் டையோட்களைப் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதனாலேயே அவை இன்னும் மிகவும் விலையுயர்ந்த தொலைக்காட்சிகளாக இருக்கின்றன, ஆனால் காலப்போக்கில் அவற்றையும் மலிவான விலைக்கு வாங்க முடியும் என்ற நம்பலாம்.