Google வரைபடத்தில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 மறைந்திருக்கும் அம்சங்கள்! பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் பார்த்ததைப் போலவே இந்த பாகத்திலும் கூகிள் வரைபடத்தின் சில சுவாரஸ்யமான அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

6. வரைபடங்களை நண்பர்களுடன் பகிரலாம்

நண்பர்களை உங்கள் புதிய வீட்டிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டைக் கண்டுபிடிக்க அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய அனைத்து அடையாளங்களையும் பட்டியலிட்டு ஒரு SMS-ஐ அனுப்புவதற்கு பதிலாக கூகிள் வரைபடத்தில் ஏன் காட்டக்கூடாது?

வரைபடத்தில் உங்கள் புதிய முகவரியைத் தேடி, கூடுதல் தகவல் (More Info) என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் பகிர் (Share) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் இருப்பிடத்தைப் பகிரலாம். நீங்கள் பகிர விரும்பும் குறிப்பிட்ட முகவரியைத் தேடி, பகிர் (Share) விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலம் கணினியில் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

7. இணையம் இல்லாத போதும் பயன்படுத்த முடியும்

நெட்வொர்க் கவரேஜ் இல்லாத அறிமுகமில்லாத இடத்திற்கு நீங்கள் செல்லும் போது போக வேண்டிய வழியை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?

நீங்கள் பார்வையிடத் திட்டமிடும் புதிய பகுதிகளின் ஆஃப்லைன் வரைபடங்களைப் பதிவிறக்க முடியும். ஆப்-இல், மெனு பொத்தானைத் தட்டி, ஆஃப்லைன் வரைபடங்களைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் பகுதியைத் தேடி பதிவிறக்கத்தை அழுத்தவும்.

உங்கள் இணைய செலவுகளைக் கட்டுப்படுத்த இந்த பயனுள்ள அம்சம் கைகொடுக்கும். ஆஃப்லைன் பயன்பாட்டிற்காக வரைபடங்களைப் பதிவிறக்குவதைத் தவிர, வைஃபை மட்டும் (Wifi Only) என்ற அம்சத்தையும் பயன்படுத்தலாம் (ஆப்-இன் மெனுவில் இது காணப்படுகிறது).

கணினியில் வரைபடத்தைப் பொறுத்தவரை, உங்கள் இணையத்தின் வேகம் குறைவாக இருக்கும்போது கூகிள் மேப்ஸ் லைட்டைப் (Google Maps Lite) பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.

8. உங்கள் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியும்

உங்கள் காரை கடைசியாக எங்கே நிறுத்தினீர்கள் என்பதை நினைவுகூர்வதில் நேரம் வீணாகிறதா? கூகிள் வரைபடம் உங்களுக்கு உதவும்!

அடுத்த முறை உங்கள் காரை நிறுத்த ஓர் இடத்தைக் கண்டறிந்தால், கூகிள் வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் நீல நிறப் புள்ளியைத் தட்டி பார்க்கிங்கை சேமி (Save Your Parking) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

9. நீங்கள் தற்போது இருக்குமிடத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் ஒரு இடத்திற்கு புதியவராகவும், அவ்விடத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாகவும் இருக்கும்போது, கூகிள் வரைபடத்தில் ஆராயுங்கள் (Explore) என்பதைத் தட்டவும். ஆப்-இன் பிரதான மெனுவில் இதைக் காணலாம்.

இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது பார்வையிடக்கூடிய சிறந்த இடங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். இதில் துரித உணவு வாங்கக்கூடிய இடம், பொருட்கள் மலிவாக வாங்கக்கூடிய இடம் போன்ற துணைப்பிரிவுகளை நீங்கள் கவனிப்பீர்கள் மற்றும் மதிப்பீடு மற்றும் விளக்கத்துடன் பரிந்துரைக்கப்பட்ட இடங்களைக் காணலாம்.

10. உங்கள் குடும்பத்தைக் கண்காணித்துக் கொள்ள முடியும்

கூகிள் வரைபட ஆப் மூலம் மற்றவர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆப்-இன் மெனு பொத்தானை அழுத்தி இருப்பிட பகிர்வைத் (Location Sharing) தட்டவும். இது மற்றவரின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.

தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது ஒரு சிறந்த வழியாகும். கூகிள் வரைபடம் எல்லா தளங்களிலும் நன்றாக இயங்குவதால், வெவ்வேறு மொபைல் இயக்க முறைமைகள் பயன்படுத்தும் மற்றவர்களைக் கண்காணிக்க இது ஒரு சிறந்த அம்சமாகும்.