Google வரைபடத்தில் நீங்கள் முயற்சிக்க வேண்டிய 10 மறைந்திருக்கும் அம்சங்கள்! பாகம் – 1

Google வரைபடங்கள் சில சுவாரஸ்யமான தந்திரங்களை அதன் ஆப்-இல் மறைத்து வைத்திருக்கிறது. அவற்றில் பாதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த சில ஆண்டுகளில் பல பிற வரைபட ஆப்களை நாங்கள் பார்த்திருந்தாலும், கூகிள் வரைபடம் இன்னும் உச்சத்தில் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இவை மொபைல் அல்லது கணினி இரண்டிலும் நன்றாக வேலை செய்கிறது. இதில் பயனுள்ள பல அம்சங்கள் நிரம்பியிருப்பதோடு பயன்படுத்தவும் எளிதானது. Google வரைபடத்தின் அறியப்படாத 10 மறைக்கப்பட்ட அம்சங்கள் இங்கே:

1. உங்கள் பழைய நினைவுகளுக்குச் சென்று உலாவ முடியும்

நீங்கள் சமீபத்தில் பார்வையிட்ட சுற்றுலா தளங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கலாம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கூகிள் மேப்ஸின் வீதிக் காட்சியில் (Street View), சில ஆண்டுகளில் இடங்கள் எவ்வாறு மாறிவிட்டன என்பதை நீங்கள் உண்மையில் பார்க்கலாம்.

நீங்கள் அதனை பார்க்க விரும்பும் வரைபடத்தில் வைத்து (கணினியில் கூகிள் வரைபடத்திற்கு செல்லும் போது) கீழிருக்கும் சிறிய மஞ்சள் நிற மனித உருவத்தை இழுத்து, கடிகார ஐகானைக் கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் கடந்த காலங்களில் சில தெருக்களும் அடையாளங்களும் எப்படி இருந்தன என்பதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த அம்சம் எல்லா இடங்களுக்கும் உடனடியாக கிடைக்காது. வீதிக் காட்சியின் பழைய பதிப்புகளுக்காக கூகிள் படம் எடுத்த இடங்கள் மட்டுமே காண்பிக்கப்படும்.

2. உங்கள் ஸ்மார்ட் போனின் திசைகாட்டியை வரைபடத்தோடு சரியாக இணைத்துக்கொள்ளலாம்.

உங்கள் ஸ்மார்ட் போனின் திசைகாட்டி தவறாக செயல்படுவதால், நீங்கள் தவறான வழியில் செல்வதை அடிக்கடி காணலாம். இந்த தடுமாற்றம் கூகிள் வரைபட ஆப்-இனால் நிகழ்வதில்லை என்றாலும், அதை சரிசெய்ய இது உங்களுக்கு உதவுகிறது.

இந்த எரிச்சலூட்டும் இக்கட்டான நிலையை சரிசெய்ய, உங்கள் ஸ்மார்ட் போனில் கூகிள் வரைபடத்தை திறந்து போனை இலக்கம் 8 வடிவில் சில முறை நகர்த்தவும். அவ்வாறு செய்யும்போது சாதனத்தின் உள்ளமைக்கப்பட்ட திசைகாட்டியின் அளவீடு சரிசெய்யப்படும்.

3. உங்கள் பயணத்திற்கு நிறுத்தங்களைச் சேர்க்கவும்

உங்கள் பயணத்தின் போது பல நிறுத்தங்களைச் சேர்க்க ஆப்-ஐ பயன்படுத்தலாம். ஆப்-இல் உங்கள் தொடக்க புள்ளியையும் இலக்கையும் நீங்கள் குறிப்பிட்ட பிறகு, மெனு பொத்தானைத் கிளிக் செய்து (திரையின் மேல் வலது மூலையில்) நிறுத்தம் (Add Stop) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கணினி பதிப்பில் நிறுத்தத்தைச் சேர்க்க முயற்சிக்கும்போது இலக்கைச் சேர் (Add Destination) என்பதைக் கிளிக் செய்யவும்.

4. ஒற்றை விரலால் வரைபடத்தை பெரிதாக்கலாம் (Zoom)

நீங்கள் வாகனம் ஓட்டலாம் அல்லது ஐபோன் 8 பிளஸ் அல்லது கூகிள் பிக்சல் எக்ஸ்எல் போன்ற பெரிய திரை கொண்ட போனை வைத்திருக்கலாம். எந்த வகையிலும், கூகிள் மேப்ஸை ஒரு கையால் பயன்படுத்துவது எப்போதும் எளிதல்ல, குறிப்பாக நீங்கள் ஒரு இடத்தை பெரிதாக்க விரும்பும் போது.

ஸ்டீயரிங் வீலில் இருந்து உங்கள் கைகளை எடுப்பதற்கு பதிலாக, இரு முறை திரையை தட்டுவதன் மூலம் வரைபடத்தை ஒரு விரலால் பெரிதாக்கவும் சிறிதாக்கவும் முடியும். திரையை இரண்டு முறை தட்டவும், ஆனால் இரண்டாவது முறை தட்டும் போது உங்கள் விரலை எடுக்காமல் மேலும் கீழும் இழுக்கும் போது இந்த அம்சம் செயற்படும்.

5. உங்கள் விருப்பப்படி வரைபடங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

கணினியில், இடங்கள் (Places) > வரைபடங்கள் (Maps) > வரைபடத்தை உருவாக்குதல் (Create Map) இற்கு செல்வதன் மூலம் வரைபடங்களைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். எதிர்கால பயணத்திற்கான பயணத்திட்டத்தைத் திட்டமிட இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் அடிக்கடி செல்லும் இடத்திற்கு விரைவாக செல்ல குறுக்குவழியை அமைத்துக் கொள்ளலாம்.

இந்த கூகிள் வரைபட அம்சம் உங்களுக்கு பிடித்த எல்லா இடங்களையும் சேர்க்கவும் உங்கள் விருப்பப்படி வரைபடத்திற்கு ஒரு பெயரையும் விளக்கத்தையும் கொடுக்கவும் உதவுகிறது.

இதில் சிறந்த பகுதி என்னவென்றால், உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் உங்கள் வரைபடத்தைப் பகிரலாம். ஒரு விடுமுறையைத் திட்டமிடும்போது அல்லது ஒரு குழுவாக சுற்றுலா செல்லும்போது இது வேலையை எளிதாக்குகிறது.

நாம் அடுத்த பாகத்திலும் கூகிள் வரைபடத்தின் இது போன்ற சில சுவாரஸ்யமான மறைந்திருக்கும் அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.