ஏரியா 51 இல் என்ன நடக்கிறது?

ஏரியா 51 என்ற இடத்தை நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம், மர்மம் என்ற சொல்லுக்கு பெயர் போன இடம் தான் இந்த ஏரியா 51. இது அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஒரு மர்மமான உயர் ரகசிய இராணுவ தளமாகும். சில கோட்பாட்டாளர்கள், இந்த இடத்தை அமெரிக்க அதிகாரிகள் வேற்றுக்கிரகவாசிகளின் ஆதாரங்களை அடித்தளத்தில் மறைத்து வைக்க பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.

உயர் பாலைவனத்தில் உயரமான மலைகளின் வளையத்திற்குள் மறைக்கப்பட்டுள்ளது இந்த ஏரியா 51. இது நெல்லிஸ் (Nellis) இராணுவ செயல்பாட்டுப் பகுதியின் ஒரு பகுதியாக கருதப்படும் ஒரு ரகசிய இராணுவ நிறுவலாகும். இது 1950 களில் இருந்து ஒரு இராணுவ சோதனை வசதியாக செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ஏரியா 51 வளாகத்தின் கட்டிடங்களை செயற்கைக்கோள் படங்களில் நீங்கள் காண முடியும் என்றாலும், இது எந்த அமெரிக்க அரசாங்க வரைபடங்களிலும் காணப்படாது. பல தசாப்தங்களாக, சதி கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists), இரகசிய நெவாடா தளத்தை வேற்று கிரகவாசிகளையும் அவற்றின் விண்கலங்களையும் பரிசோதிக்க அரசாங்கம் பயன்படுத்துவதாக ஊகித்துள்ளனர்.

நியூ மெக்ஸிகோவின் ரோஸ்வெல் என்ற இடத்திற்கு அருகே ஒரு வேற்றுக்கிரக விண்கலம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் 1947 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை அரசாங்கம் இந்த இடத்தைக் கொண்டு மூடிமறைத்ததாக சிலர் சந்தேகப்படுகின்றனர். இன்னும் சிலர் நெவாடா பாலைவனத்தில் தான் 1969 ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் நிலவின் மீது தரையிறங்கியது ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இது போன்ற சந்தேகம் கொண்டவர்கள் இதை நம்புவது கடினம் – ஆனால் அது உண்மை இல்லை என்றால், ஏரியா 51 இல் உண்மையில் என்ன நடக்கிறது?

பல ஆண்டுகளாக, ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறை, அமெரிக்க விமானப்படை மற்றும் விண்வெளி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் அனைத்தும் ஏரியா 51 ஐ சோதனை விமானங்களுக்கு (“கருப்பு விமானம்”) அரங்கமாக பயன்படுத்தி வருகின்றன. 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, 1950 கள் மற்றும் 1960 களில் ஏரியா 51 ஆக்ஸார்ட் என அழைக்கப்படும் ஒரு ரகசிய பனிப்போர் கால திட்டத்தின் ஒரு இடமாக இருந்தது. இது ஒரு உளவு விமானத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதை கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைத்து இராணுவ தகவல்களை சேகரிக்க பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, ஒரு மணி நேரத்திற்கு 2,000 மைல்களுக்கு மேல் வேகத்தில் பயணிக்கக்கூடிய மற்றும் 90,000 அடி உயரத்தில் இருந்து தரையில் உள்ள பொருட்களின் தெளிவான படங்களை எடுக்கக்கூடிய ஆர்க்காங்கல் -12 அல்லது ஏ -12 ஆகிய போர் விமானங்கள் உருவாக்கப்பட்டன. அங்கு சோதனை செய்யப்பட்ட பிற நன்கு அறியப்பட்ட விமானங்களில் ஏ -12 இற்கு பிறகு வந்த SR-71 பிளாக்பேர்ட் மற்றும் F-117 நைட்ஹாக் என்பவை ஒளி ஊடுருவக்கூடிய போர் விமானங்களாகும். எனவே இந்த விமானங்கள் ஆகாயத்தில் பயணிக்கும் போது யார் கண்ணுக்கும் புலப்படாததோடு ரேடாரினாலும் கண்டுபிடிக்க முடியாது.

தரையில் இருந்து, மாக் -3 (மணிக்கு 3704.4 கிலோ மீட்டர்) வேகத்தில் பயணிக்கும் இத்தகைய சோதனை விமானம் சந்தேகத்திற்கு இடமின்றி வேற்றுக்கிரக விண்கலம் எப்படி இருக்கும் என்பது பற்றிய சிலரின் யோசனையை ஒத்திருந்தது. இது பல ஆண்டுகளாக நெவாடாவிற்கு மேலே உள்ள வான்வெளியில் மர்மமான பொருட்கள் தென்பட்டது தொடர்பாக ஏன் பலர் புகாரளித்தனர் என்பதை விளக்க உதவுகிறது. அருகிலிருக்கும் க்ரூம் ஏரி தளத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தென்பட்ட இதுபோன்ற காட்சிகள் ஏரியா 51 இன் வேற்றுகிரகவாசிகள் பற்றிய வதந்திகளை மேலும் அதிகரித்தது. இந்த வதந்திகளே இன்றும் ஏரியா 51 ஐ ஒரு மர்ம இடமாக வர்ணித்து வருகின்றது.

ஆனால், ஒரு சாதாரண மனிதன் இந்த இடத்திற்குள் சென்று பார்வையிட்டு அதை வெளியே சொல்லும் வரை இது ஒரு மர்மமாகவே இருக்கும்.