நாம் ஏன் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உங்கள் உடல் எடை மட்டுமே நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கான காரணம் அல்ல. உடல் எடையை குறைப்பதே உங்கள் ஒரே குறிக்கோள் என்றால், உங்கள் வொர்க்அவுட்டை (Workout) மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது. உடற்பயிற்சி செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதற்கான நோக்கம் உங்கள் எடையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில், வழக்கமான உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பெரிய பகுதியாகும், மேலும் நீண்ட ஆயுளுக்கு அது உறுதியளிக்கும். இது போன்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு எந்நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய காரணங்களில் சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம்.

1. உடற்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஞாபகசக்தியை மேம்படுத்துகிறது.

ஒரு சில ஆய்வுகள், உடல் ரீதியாக தகுதியுள்ள குழந்தைகள், பல சோதனைகளில் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றன. மிதமான நடைபயிற்சி கூட பகுத்தறிவு, நினைவகம், கவனத்தை ஈர்ப்பது மற்றும் தகவல் மற்றும் அறிவின் விரிவாக்கம் போன்ற அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளில் ஒரு அரை மணி நேர நடைபயிற்சி கூட சிறந்த பலனைத் தரும்.

2. உடற்பயிற்சி ஒரு இயற்கை மனஅழுத்த நிவாரணி.

30 நிமிடங்கள் மிதமான நடைக்குச் செல்வது உங்கள் உடலில் பல நோய்களை எதிர்த்துப் போராட உதவும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மனஅழுத்தத்துக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்கின்றது என்ற கருத்தை பல ஆய்வுகள் ஆதரிக்கின்றன.

3. உடல் கட்டமைப்பை சரியாக பேணுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது நிம்மதியாக உணர்கிறீர்கள், அழகாக மாறுகிறீர்கள், வலுவடைகிறீர்கள், நீங்கள் ஒரு சாதனை உணர்வை உணர்கிறீர்கள், மேலும் உடற்பயிற்சி செய்வதினால் உருவாகும் எண்டோர்பின் எனும் ஹார்மோன்கள் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு திருப்தியை உணர வைக்கிறது. இதனால் உங்கள் மனது எப்பொழுதும் வலிமை மற்றும் நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்தும்.

4. ஒரு உடற்பயிற்சி முறை உங்களுக்கு நன்றாக தூங்க உதவும்.

நீங்கள் ஒரு நல்ல உடற்பயிற்சி முறையைக் கொண்டிருக்கும்போது எந்நாளும் நன்றாக உறங்குவீர்கள். மேலும் உங்கள் தூக்க நேரத்தை சரி செய்து கொள்ளவும் உடற்பயிற்சி உதவுகிறது. எனவே பகலில் உங்கள் உடற்பயிற்சி நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளவும். படுக்கைக்கு செல்வதற்கு அண்மைய நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

5. உங்கள் இதயம் உங்களுக்கு நன்றி சொல்லும்.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 8.6 மில்லியன் பெண்கள் இதய நோயால் இறக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, உடற்பயிற்சி இதய சம்பந்தப்பட்ட நோய்களை வியத்தகு முறையில் குறைக்க உதவுகிறது, உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது, மேலும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

6. நீங்கள் இளமையாக இருப்பீர்கள்.

இளமையின் ரகசியமானது மந்திர நீர் போன்ற எதுவுமல்ல. அது உடற்பயிற்சி! நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலை சிறந்த ஆரோக்கியத்திற்கு உட்செலுத்துகிறோம், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறோம், மனதை புதுப்பிக்கிறோம், மேலும் உடலின் அழகைப் பேணுகிறோம். இதனால் எமது இளமை பாதுகாக்கப்படுகின்றது. எங்களால் கடிகாரத்தை நிறுத்த முடியாது, ஆனால் அதை மெதுவாக வேலை செய்ய வைக்கலாம்.

7. தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது.

நாம் 30 வயதிற்குள் எலும்பு மற்றும் தசை என்பவற்றின் முழு வளர்ச்சியை அடைகிறோம். 40 வயதாகும்போது அதை இழக்கத் தொடங்குகிறோம். சரியான ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம், குறிப்பாக எதிர்ப்பு பயிற்சி (Body Resistance) (உடல் எடை சம்பந்தமான உடற்பயிற்சி / அல்லது உடல் எதிர்ப்பு பயிற்சி வாரத்தில் பல நாட்கள் செய்தல்) மூலம், இந்த செயல்முறையை நாம் மெதுவாகவும் தலைகீழாகவும் மாற்றலாம். உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாகம் மெலிந்ததாகவும் வைத்திருப்பது ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

8. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!

சிறந்த இருதய ஆரோக்கியம்? வலுவான தசைகள் மற்றும் எலும்புகள்? அதிக ஆற்றலும் நம்பிக்கையும்? உடற்பயிற்சி செய்வதற்கான முக்கியமான சில காரணங்கள் இவைதான். ஆனால் மகிழ்ச்சியாக இருப்பது எமக்கு பிடித்தமான ஒன்று. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் படுக்கையில் இருந்து இறங்கி உடற்பயிற்சி செய்யத் தொடங்குவது.

உங்களால் முடியும். இனி வரும் காலத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ இன்றே ஒரு உடற்பயிற்சி முறையை தொடங்கலாமே.