SLS-ஐ சோப்பு மற்றும் பற்பசையில் பயன்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பாகம் – 1

நீங்கள் தோல் பற்றிய பிரச்சினைகள் அல்லது சேதமடைந்த கூந்தலுக்கான காரணங்களை எப்போதாவது கூகிளில் தேடியிருந்தால், அது அழகு பொருட்கள், பற்பசைகள், சோப்புகள் மற்றும் அழுக்குகளை அகற்றும் பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் SLS அல்லது சோடியம் லாரில் சல்பேட்-ஐயே (Sodium Lauryl Sulfate) காட்டும்.

எனவே இந்த மூலப்பொருள் என்ன செய்கிறது? இது ஏன் எல்லாவற்றிலும் இருக்கிறது? அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதற்கான சான்றுகள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

SLS பயன்படுத்தப்படுவது ஏன்?

நாம் நம் தோலில் சோப்பு அல்லது அழகு சாதனப் பொருளைப் பயன்படுத்தும்போது, அது அநேகமாக நீர் மற்றும் எண்ணெய்யால் ஆன திரவமாக மாறும். எப்போதும் எண்ணெய்யும் தண்ணீரும் ஒன்றுடனொன்று கலக்காது, எனவே இவற்றை ஒன்றாக வைத்திருக்க ஏதாவதொரு மூலப்பொருள் தேவை.

அந்த பொருள் மேல் பரப்பி (Surfactant) என்று அழைக்கப்படுகிறது. ஒரு மேல் பரப்பி எண்ணெய் மற்றும் நீர் மூலக்கூறுகளை ஒன்றிணைக்க அனுமதிக்கிறது. எனவே இது சவர்க்காரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே எண்ணெய்ப் பசையுள்ள முகத்தையோ அல்லது உணவு உண்டபின் கையையோ தண்ணீரில் கழுவுவது எளிதாக இருக்கின்றது.

சோடியம் லாரில் சல்பேட்டின் செயல்திறன், குறைந்த செலவு, மற்றும் எளிமை போன்ற பண்புகளினாலேயே இது பலவிதமான அழகு, தோல் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

எங்கள் சருமத்தின் வெளிப்புற அடுக்கு, தீங்கு விளைவிக்கும் விஷயங்களை எதிர்ப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஒரு மேல் பரப்பி சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது தோலின் பாதுகாப்பு பொறிமுறையை பலவீனப்படுத்தும் ஒரு வேதிப்பொருளாக இருக்கின்றது.

மேலும் சிலநேரங்களில் சில மேல் பரப்பிகள் மற்றவர் சருமத்தை விட நம் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. ஒரு வேதிப்பொருள், தீங்கு விளைவிக்கும், எரிச்சலூட்டும் அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த அது இரண்டு அளவுகோல்களில் பொருந்தியிருக்க வேண்டும்.

ஒன்று, இது மனித சருமத்தை எரிச்சலூட்டுவதற்கான ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது, இது சருமத்தில் ஊடுருவக்கூடிய திறனைக் கொண்டிருக்க வேண்டும். SLS இந்த இரண்டுக்கும் பொருந்துகிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் SLS எரிச்சலுக்காக 1,600 நோயாளிகளை பரிசோதித்தனர். இதில் 42 சதவீதம் நோயாளிகளுக்கு எரிச்சலூட்டும் எதிர்வினை இருப்பதைக் கண்டறிந்தனர்.

மற்றொரு ஆய்வில், SLS உடன் பயன்படுத்தப்படும் நீர் வெப்பமாக இருந்தால் அதன் எரிச்சலூட்டும் தன்மை அதிகமாவது கண்டறியப்பட்டது.

உண்மையில், SLS தோல் பரிசோதனையில் நேர்மறையான கட்டுப்பாட்டாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது, புதிய தயாரிப்புகள் மனித தோலுக்கு எவ்வளவு எரிச்சலூட்டுகின்றன என்பதைக் காண சோதிக்கப்படுகின்றன – அவை SLS உடன் ஒப்பிடப்படுகின்றன.

SLS இற்கு விளைவு காட்டும் சருமத்தில், அது தொடர்பு கொண்ட பகுதி சிவப்பு, உலர்ந்த, செதில், அரிப்பு அல்லது புண் ஆக மாறியிருப்பதைக் காணலாம்.

நீங்கள் இணையத்தில் என்ன படித்தாலும், SLS புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் அடுத்த பாகத்திலும் இந்த SLS-ஐப் பற்றிய இன்னும் சில விடயங்களைத் தெரிந்து கொள்வோம்.