சந்திர கிரகணம் என்றால் என்ன? அடுத்தது எப்போது நிகழும்? பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் சந்திர கிரகணம் என்றால் என்ன என்பதை விளக்கமாக பார்த்தோம். அதே போன்று இந்த பாகத்தில் சந்திர கிரகணத்தின் வகைகளையும் அது இந்த வருடத்தில் அடுத்து நிகழும் தினங்களையும் பார்ப்போம்.

சந்திர கிரகணங்களின் வகைகள்

முழுச் சந்திர கிரகணம்: இந்நிகழ்வின் போது பூமியின் முழு நிழலும் நிலவில் விழுகிறது. சந்திரன் முற்றிலுமாக மறைந்துவிடாது, ஆனால் அது ஒரு விந்தையான இருளாக தென்படும். அதனால் கிரகண நேரம் நீங்கள் சரியாக சந்திரனை கண்டுபிடிக்கவில்லை என்றால் கிரகணத்தை எளிதில் தவறவிடலாம். பூமியின் வளிமண்டலத்தினூடு செல்லும் சில சூரிய ஒளி சிதறடிக்கப்பட்டு, ஒளிவிலக்கப்பட்டு, அல்லது வளைந்து, சந்திரனில் விழுகிறது. இதனாலேயே முழுச் சந்திர கிரகணத்தின் போது நிலவு மங்கலான பிரகாசத்தில் தென்படுகிறது.

நீங்கள் சந்திரனில் நின்று கொண்டு சூரியனைத் திரும்பிப் பார்த்தால், பூமியின் கருப்பு வட்டு முழு சூரியனையும் தடுப்பதைக் காண்பீர்கள். ஆனால், பூமியின் விளிம்புகளைச் சுற்றி ஒளிரும் ஒளியின் வளையத்தையும் நீங்கள் காண்பீர்கள். அந்த ஒளி தான் முழுச் சந்திர கிரகணத்தின் போது சந்திரனில் விழுந்து ஒரு சிறிய பிரகாசத்தை உருவாக்குகிறது.

பகுதி சந்திர கிரகணம்: சில கிரகணங்கள் பகுதியாக மட்டுமே நிகழும். ஆனால், ஒரு முழுச் சந்திர கிரகணம் நிகழும் போது கூட சந்திரனின் இந்த பகுதியான மறைவை காண முடியும். பகுதி சந்திர கிரகணத்தின் போது, சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியாக நேர்கோட்டில் இருக்காது.

“பகுதி சந்திர கிரகணத்தின் போது மக்கள் பூமியிலிருந்து நிலவைப் பார்க்கும் போது சூரியன், பூமி மற்றும் சந்திரன் எவ்வாறு வரிசையாக நிற்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்” என்று நாசா கூறுகிறது.

புறநிழல் சந்திர கிரகணம்: இது மிகக் குறைவாக நிகழும் சுவாரஸ்யமான கிரகணம். ஏனெனில், இதன் போது சந்திரன் பூமியின் மங்கலான வெளிப்புற நிழலில் இருக்கும். நீங்கள் ஒரு அனுபவமிக்க வானக் கண்காணிப்பாளராக இல்லாவிட்டால், பூமியின் நிழலால் சந்திரன் நுட்பமாக நிழலாடும் விளைவை கவனிக்க மாட்டீர்கள்.

“பூமியின் புறநிழலின் வெளிப்புறம் மிகவும் வெளிர் நிறமானது. எனவே இந்நிழல் சந்திரனின் விளிம்பில் குறைந்தது பாதியளவு வரும் வரை நீங்கள் எதையும் கவனிக்க மாட்டீர்கள்” என்று ஸ்கை & டெலஸ்கோப் பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ஆலன் மேக்ரோபர்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரத்தச் சிவப்பு நிலவு

சில நேரங்களில் முழுச் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு அல்லது செப்பு நிறமாக மாறக்கூடும். ஏனெனில் சந்திரன் பூமியின் நிழலில் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கும் போது, சூரியனில் இருந்து சிறிது ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து சந்திரனை நோக்கி வளைகிறது. ஸ்பெக்ட்ரமில் (Spectrum) உள்ள மற்ற வண்ணங்கள் பூமியின் வளிமண்டலத்தால் தடுக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டாலும், சிவப்பு நிறம் அதனை ஊடுருவிச் செல்கிறது.

“இதன் போது சந்திரன் தோன்றும் சரியான நிறம், வளிமண்டலத்தில் உள்ள தூசி மற்றும் மேகங்களின் அளவைப் பொறுத்தது” என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வளிமண்டலத்தில் கூடுதலாக தூசி இருந்தால், சந்திரன் கடும் சிவப்பு நிறமாக தோன்றும்.

அடுத்த சந்திர கிரகணம் எப்போது நிகழும்?

கடைசி சந்திர கிரகணம் இந்த மாதம் 10ம் திகதியன்று நிகழ்ந்தது. இது ஒரு புறநிழல் சந்திர கிரகணம் ஆகும். 2020 ஆம் ஆண்டில் அடுத்து வரும் சந்திர கிரகணங்களின் பட்டியல் இங்கே:

அடுத்த முழுச் சந்திர கிரகணத்தை 2021ம் வருடம் மே மாதம் 26ம் திகதியன்று காணலாம்.