சந்திர கிரகணம் என்றால் என்ன? அடுத்தது எப்போது நிகழும்? பாகம் – 1

சூரியனிலிருந்து சந்திரனுக்கு கிடைக்கும் ஒளியை பூமியின் நிழல் தடுக்கும் போது சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. அவற்றில் முழு, பகுதி, மற்றும் புறநிழல் என மூன்று வகைகள் உள்ளன. இதில் மிகவும் வியத்தகு முறையில் தென்படக்கூடியது முழு சந்திர கிரகணம் ஆகும். இந்நேரம் பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்திருக்கும்.

அடுத்த சந்திர கிரகணம் ஜூன் 5, 2020 அன்று ஒரு புறநிழல் சந்திர கிரகணமாக நிகழும். இது தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு தென்படும்.

பண்டைய காலங்களில், கிரகணங்கள் பிரமிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, முழு சந்திர கிரகணங்கள் சந்திரனை இரத்த-சிவப்பு நிறமாக மாற்றியபோது , இது எதனால் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாத மக்கள் பயந்தனர். எனவே, அதற்கு கடவுளை குற்றம் சாட்டினர்.

சந்திர கிரகணங்களின் அறிவியல் மற்றும் வரலாற்றையும், அவை எவ்வாறு நிகழ்கின்றன என்பதையும் கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

பெளர்ணமியில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். சூரியன், பூமி, மற்றும் சந்திரன் ஆகியவை சரியாக ஒரே நேர்கோட்டில் இருக்கும்போதுதான் முழுச் சந்திர கிரகணம் நிகழும் – முழுமையை விட குறைவானது, பகுதி சந்திர கிரகணத்தை உருவாக்குகிறது. எளிய வான இயக்கவியல் பற்றிய சில புரிதல் சந்திர கிரகணங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை விளக்குகிறது.

பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை, சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையை விட சற்று வித்தியாசமான விமானத்தில் அமைந்திருப்பதால் கிரகணத்திற்கான சரியான சீரமைப்பு ஒவ்வொரு பெளர்ணமியிலும் ஏற்படாது. முழு சந்திர கிரகணம் பொதுவாக இரண்டு மணி நேரம் நிகழ்கிறது.

அதாவது சந்திர கிரகணத்தின் போது சந்திரனில் விழும் இரண்டு நிழல்களையும் பூமி காட்டுகிறது: அவை அம்ப்ரா (Umbra) எனப்படும் முழுமையான இருண்ட நிழலும், பெனும்ப்ரா (Penumbra) எனப்படும் பகுதியான வெளிப்புற நிழலும் ஆகும். சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஒவ்வொரு கட்டங்களாக இந்த நிழல்கள் வழியாக செல்கின்றது. ஆரம்ப மற்றும் இறுதி கட்டங்களில் சந்திரன் வெளிப்புற நிழலில் இருக்கும்போது கிரகணம் நிகழ்வது அவ்வளவாக தென்படாது. எனவே ஒரு கிரகணத்தின் சிறந்த பகுதி, பூமியின் முழுமையான இருண்ட நிழலில் சந்திரன் பயணிக்கும் நேரம் ஆகும்.

சந்திரன் உருவானதிலிருந்து அதாவது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, அது நமது கிரகத்திலிருந்து (சுமார் 1.6 அங்குலங்கள் அல்லது வருடத்திற்கு 4 சென்டிமீட்டர்) விலகிச் செல்கிறது. இப்போது பூமியிலிருந்து சந்திரனின் தூரத்தின் அமைவு பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மூடுவதற்கு சரியாக உள்ளது. ஆனால், இப்போதிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளின் பின் அந்த அமைப்பு மாறுபட்டு எம்மால் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் போகலாம்.

நாசாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் நான்கு சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன. அதே நேரத்தில் சந்திர கிரகணங்கள் குறைவாகவே நிகழ்கின்றன. “எந்த ஒரு காலண்டர் ஆண்டிலும், அதிகபட்சமாக நான்கு சூரிய கிரகணங்கள் மற்றும் மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன” என்று கூறப்படுகின்றது. இருப்பினும், சூரிய கிரகணங்களை பூமியில் சுமார் 50 மைல் அளவிலான ஒரு பகுதி மட்டுமே ஒரே நேரத்தில் காண முடியும். ஆனால், ஒவ்வொரு சந்திர கிரகணமும் பூமியிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஒரே நேரத்தில் தெரியும்.

சந்திர கிரகணத்தின் வகைகளைப் பற்றியும் அடுத்த கிரகணங்கள் நடைபெறும் நாட்களைப் பற்றியும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.