ஒரு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தால் உங்கள் மூளைக்கு என்ன நடக்கிறது?

எமது வாழ்வில் இதுபோன்ற பல தவிர்க்க முடியாத தருணங்கள் உள்ளன – உங்கள் வகுப்பிற்கு மதிப்பீடொன்றை கையளிக்க வேண்டியிருக்கலாம், குடும்ப உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அவசர அறையில் இருக்கலாம், உங்கள் நிறுவனத்திற்கான ஒரு முக்கியமான வேலையாக இருக்கலாம் – ஆனால் ஒரு இரவு முழுவதும் விழித்திருப்பது உங்கள் உடலுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

நோர்வேயில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் எங்கள் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை உற்று நோக்கினர். அதன் முடிவு மிகவும் பயங்கரமானதாக இருந்தது (நீங்கள் எப்போதாவது ஒரு தூக்கமில்லாத இரவை அனுபவித்திருந்தால் இது உங்களுக்கு புரிந்திருக்கும்).

அவர்கள் இந்த ஆய்வில் ஆரோக்கியமான 21 இளைஞர்களை தொடர்ச்சியான DTI சோதனைகளுக்கு உட்படுத்தினர். இதன் மூலம் உடலின் நீரின் அளவும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமும் கண்காணிக்கப்பட்டது.

இந்த இளைஞர்கள் 23 மணி நேரம் விழித்திருந்தனர். ஆய்வாளர்கள் ஆய்வின் போது சில கட்டுப்பாட்டு நிலைமைகளை பேணுவதற்காக, அவர்களுக்கு மது, காஃபின் அல்லது நிகோடின் உட்கொள்ள அனுமதிக்கவில்லை, மேலும் DTI ஸ்கேன் செய்வதற்கு முன்பு அவர்களுக்கு எதையும் சாப்பிடவும் அனுமதிக்கவில்லை.

தூக்கமில்லாத ஒரு இரவுக்குப் பிறகு மூளைக்குள் இருக்கும் வெண்பொருளில் “குறிப்பிடத்தக்க” மாற்றங்களை 2015 இல் நடத்தப்பட்ட இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. அதாவது மூளைக்குள் இருக்கும் நரம்பு இணைப்புகள் அழிய ஆரம்பிக்கின்றன. தூக்கமில்லாத இரவுக்குப் பிறகு உங்கள் எண்ணங்களைச் சேகரிக்க முயற்சித்திருந்தால், நீங்கள் இதனை உணர்ந்திருப்பீர்கள்.

மூளையின் முக்கியமான பாகங்களான பெருமூளை இணைப்பி, மூளைத்தண்டு, மூளை நரம்பு முடிச்சு, மூளையின் முன் மடல் மற்றும் உச்சிப்பக்க மடல் பாதைகளை உள்ளடக்கிய பல இடங்களில் பெரும் மாற்றங்கள் காணப்பட்டன.

இந்த சேதம் எவ்வளவு நிரந்தரமானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அடுத்த இரவு ஒரு நீண்ட தூக்கத்தால் இந்த அனைத்து சேதங்களும் சரிசெய்யப்படுமா என்பதும் இன்னும் அறியப்படவில்லை.

எங்கள் நரம்பியல் திசுக்களின் வடிவமைப்பில் நடக்கும் இந்த மாற்றங்களுக்கு பிற காரணிகள் எவ்வளவு தூரம் பங்களிக்கின்றன என்ற கேள்வியும் உள்ளது.

எனது கருதுகோள் என்னவென்றால், மூளையின் வெண்பொருளின் நுண்கட்டமைப்பில் ஒரு இரவு தூக்கமின்மையின் விளைவுகள் குறுகிய கால மற்றும் சாதாரண தூக்கத்தின் சில இரவுகளுக்குப் பிறகு குணமாக்கப்படும்

டொர்ப்ஜோர்ன் எல்வ்சாஹகன்

என்று எழுத்தாளர் டொர்ப்ஜோர்ன் எல்வ்சாஹகன் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறுகிறார்.

இருப்பினும், நாள்பட்ட தூக்கமின்மை மூளையின் கட்டமைப்பில் நீண்டகால மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று அனுமானிக்கலாம்

டொர்ப்ஜோர்ன் எல்வ்சாஹகன்

என்றும் அவர் ஒரு கருத்தை வெளியிடுகிறார்.

சில நேரங்களில் ஆய்வில் பங்கேற்ற இளைஞர்களின் மூளையின் நடத்தை ஒருவருக்கு போல் மற்றவருக்கு இருக்கவில்லை. இது நம்மில் சிலருக்கு தூக்கமின்மையின் விளைவுகளிலிருந்து சிறப்பாக பாதுகாக்கப்பட்ட உடல்கட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

இது ஒரு சிறிய ஆய்வு என்பதால் இதனைக் கொண்டு நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது. ஆனால், குறுகிய நேர இடைவெளியில் கூடுதல் ஸ்கேன்களைச் செய்து மற்றும் பங்கேற்பாளர்களின் அன்றாட செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தால் இதற்கான சரியான முடிவைப் பெற வாய்ப்புக்கள் அதிகம்.

ஏராளமான பிற ஆராய்ச்சியாளர்களும் இது போன்ற ஆராய்ச்சிகளில், தூக்கமின்மை நம் மரபணுக்களிலும் நமது மூளையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இது நாம் அனைவரும் கட்டாயமாக யோசிக்க வேண்டிய விஷயமாகும்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் போதுமான தூக்கம் கிடைக்காத போது மூளை தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் தொடங்குவதாக கண்டறிந்துள்ளனர்.

எனவே, இந்த விடயங்களை நாம் கருத்தில் கொண்டு எந்நாளும் போதியளவு (7 முதல் 8 மணிநேரம்) தூக்கத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.