வானவேடிக்கை பட்டாசுகளின் வண்ணங்களுக்குப் பின்னால் உள்ள இரசாயனவியல்!

தீபாவளி, பொங்கல், புதுவருடம் ஆகிய எல்லா பண்டிகைகளிலும் நாம் பட்டாசுகளுடன் சேர்த்து வாணவேடிக்கைகளையும் வெடிக்கிறோம். வெடிக்கும் தூள், இரசாயனங்கள் மற்றும் பசை ஆகியவற்றின் கலவையிலிருந்தே இந்த பட்டாசுகள் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உபயோகத்தில் இருப்பதாக பல தொல்பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் எல்லா பட்டாசுகளும் ஒரே மாதிரியாக உருவாக்கப்படுவதில்லை. நீல அல்லது வெள்ளை நிறத்தில் உள்ள பட்டாசுகளின் இரசாயனங்களால் ஒரு பிரகாசமான சிவப்பு பட்டாசுகளை பெற முடியாது. ஏனென்றால், ஒரு பட்டாசு வெடிப்பின் நிறம், பொதுவான உலோகங்கள் முதல் அரிதான தாதுக்கள் மற்றும் சில உப்புகள் வரை என்ன வகையான கூறுகள் உள்ளே உள்ளன என்பதைப் பொறுத்தது.

பைரோடெக்னீஷியன்கள் இந்த வண்ண வெடிப்புகளை “நட்சத்திரங்கள்” என்று அழைக்கிறார்கள், மேலும் அவை எரிபொருள், ஆக்ஸிஜனேற்றி (எரிபொருள் எரிக்க உதவும்), வண்ணத்தை உருவாக்கும் கூறுகள் (அலுமினியம் அல்லது செம்பு போன்றவை) மற்றும் ஒரு வகை பசை ஆகியவற்றின் கலவையால் ஆனவையே இந்த பட்டாசுகள் என்று விவரிக்கின்றனர்.

நாம் காணும் வாணவேடிக்கை பட்டாசுகளுக்கு எந்த இரசாயனங்கள் அந்த நிறத்தை கொடுத்திருக்கின்றன என்று நாம் பார்ப்போம்.

மஞ்சள் நிற பட்டாசுகள் வெள்ளை நிறத்துடன் தொடர்புடைய சோடியத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த இரசாயனமே வெள்ளை நிற வாணவேடிக்கை பட்டாசுகளுக்கும் உபயோகப்படுத்தபடுகின்றன. நீங்கள் உண்ணும் உப்பிற்கு தான் சோடியம் சொந்தமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எரியும் சூடான சோடியம் பிரகாசமான மஞ்சள் வெடிப்பை உருவாக்கி வானத்தை ஒளிரச் செய்வதற்கும் ஏற்றது.

சிவப்பு பட்டாசுகள் ஸ்ட்ரோண்டியம் (Strontium) என்ற மூலகத்தினால் தயாரிக்கப்படுகின்றன. ஸ்ட்ரோண்டியம் நிறைய பழைய வண்ண தொலைக்காட்சி பெட்டிகளின் கண்ணாடித் திரைகளில் பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் இது எக்ஸ்ரே கதிர்கள் எங்கள் கண்களை தாக்கவிடாமல் தடுக்க உதவுகிறது. இது திண்ம நிலையில் மஞ்சள் நிறமாக இருக்கும், ஆனால் அது எரியும் போது சிவப்பாக மாறுகிறது.

பேரியம் எனும் உப்புகள் வானத்தில் வெடிப்பதன் விளைவாகவே பட்டாசுகள் பச்சை நிறத்தைப் பெறுகின்றன. பெரும்பாலான பச்சை பட்டாசுகள் பேரியம் நைட்ரேட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது சுவாசிக்க நச்சுத்தன்மையானது. எனவே இந்த இரசாயனம் வேறு எதற்கும் பயன்படுத்தப்படவில்லை, இருப்பினும் இது கையெறி குண்டுகளில் ஒரு மூலப்பொருளாக இருக்கின்றது.

பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு நீல நிறங்கள் இன்னும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. அவை செப்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சரியான நீல நிறத்தைப் பெற செப்பின் வெப்பநிலை மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என இரசாயனவியலாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை ஒளி அலுமினியம் அல்லது மெக்னீசியத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த வேதியியல் கூறுகள் அதிக எரியும் வெப்பநிலையைக் கொண்டுள்ளன. பிற வண்ணங்களைப் பெற சில இரசாயனங்களைச் சேர்த்து பட்டாசுகளைத் தயாரிக்க முடியும்.

செப்பு மற்றும் ஸ்ட்ரோண்டியம் ஆகியவற்றின் கலவையானது ஊதா நிறத்தை தருகின்றது. பளபளக்கும் தங்க பட்டாசுகள் பழமையான பட்டாசு தயாரிப்புப் பொருட்களான கார்பனைப் பயன்படுத்துகின்றன.

ஆகவே அடுத்த முறை வாணவேடிக்கைகளைப் பார்க்கும் போது எந்த இரசாயனத்தினால் இந்த நிறத்தில் வெடிக்கின்றது என உங்களுக்கு ஊகித்துக் கொள்ளலாம்.