தற்போதைய காலநிலை மாற்றத்தால் 2050 ஆம் ஆண்டளவில் நமது மனித நாகரீகமே முடிவுக்கு வரலாம்!

காலநிலை மாற்றத்தால் உலகமே அழியும் நாள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால், நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை இல்லாவிடின், 2050 ஆண்டளவில் காலநிலை மாற்றம் “மனித நாகரீகத்திற்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக” மாறக்கூடும் என்று ஒரு புதிய பகுப்பாய்வு கணித்துள்ளது.

புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையின் முன்னாள் நிர்வாகியால் எழுதப்பட்ட புதிய அறிக்கையானது, காலநிலை மீட்டமைப்புக்கான 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை பெரும்பாலும் மிகவும் தீவிர காலநிலை மாறுபாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதை சுட்டிக்காட்டியுள்ளது.

மற்றும், முன்னாள் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் தலைவரான அட்மிரல் கிறிஸ் பெர்ரி ஒப்புக் கொண்ட செய்தியானது “அடுத்த 30 ஆண்டுகளில் நாம் காலநிலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நமது கிரகமானது 3 டிகிரி செல்சியஸ் இன்னும் வெப்பமடைய வாய்ப்புள்ளது, இதனால் மனித நாகரிகத்தினால் அதை தாங்க முடியாது” என்பதாகும். இந்த காலகட்டத்தில், உலகளாவிய நிலப்பகுதியில் 35 சதவிகிதம், மற்றும் உலக மக்கள் தொகையில் 55 சதவிகிதம், ஒரு வருடத்திற்கு 20 நாட்களுக்கு மேல் அளவுக்கதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும். இந்த வெப்பநிலை மனித உடல் தாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாகும்.

பவளப்பாறைகள், அமேசான் மழைக்காடு மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் அழிந்து விடும். வட அமெரிக்கா காட்டுத்தீ, அனல் காற்று மற்றும் வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படும். ஆசியாவின் பெரிய ஆறுகள் கடுமையாக குறைக்கப்படும்பொழுது தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதால் உலகெங்கிலும் சுமார் 2 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் மழை பற்றாக்குறையால் உலர் நிலங்கள் வேளாண்மை செய்ய முடியாத பயனற்ற நிலங்களாக மாறிவிடும். நூற்றுக்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கொடிய வெப்ப அலைகள் தொடர்ந்து இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வார்கள். இந்த நேரத்தில், மனித நாகரீகம் மற்றும் நவீன சமுதாயத்தின் சீரான பாதையில் குழப்பம் ஏற்பட்டு உலகில் மனித உயிருக்கான பாதுகாப்பு பெரும் சவால்களை எதிர்நோக்கும்.

நாம் இந்த விடயத்தை பற்றி அதிகமாக கற்பனை செய்வதாக தோன்றலாம், ஆனால் இந்த நிகழ்வின் நிகழ்தகவை பார்க்கும்போது நாம் நினைப்பதைவிட அதிகமாக நடக்கலாம்.

“இந்த அபாயத்தை குறைத்து மனித நாகரிகத்தை பாதுகாக்க, இதுபற்றிய ஒரு பாரிய தொழில்துறை அமைப்பை உருவாக்கி, ஒரு பாதுகாப்பான சூழலை மறுசீரமைக்கும் குழுவை அமைத்து, அடுத்த தசாப்தத்தில் வளங்களை பாதுகாக்க ஒரு உலகளாவிய அணிதிரட்டல் தேவை” என்று ஒரு அறிக்கை விவரிக்கிறது.

இதற்காக நம்மால் முடிந்த இலகுவான தீர்வு இன்றே மரம் நட ஆரம்பிப்பதாகும். எம்மால் முடிந்த அளவு மரம் நடுவதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான உலகத்தை கொடுக்க முடியும்.