எக்ஸ்-ரே மூலம் பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்துகொள்ள புதிய வழிமுறை!

NASA இன் NICER எனும் விசேடமான கருவி சமீபத்தில் படம்பிடித்த இரவு வானத்தின் புகைப்படத்தின் மூலம் இத்தொலைநோக்கி இரவிலும் தூங்குவதில்லை என்பதை நாம் நம்பலாம். பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும் எக்ஸ்-கதிர்களின் அண்ட ஆதாரங்களைப் (Cosmic Sources) படிப்பதற்கான கிட்டத்தட்ட இரண்டு வருட முயற்சியின் விளைவாக எடுக்கப்பட்டதே இந்த மின்னும் புள்ளிகளும் சிக்கலான சுழல்களும் கொண்ட புகைப்படமாகும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு சலவை இயந்திர அளவிலான கருவியே NICER ஆகும். ஐ.எஸ்.எஸ் சுற்றுப்பாதையில் சூரியன் அஸ்தமித்த பிறகு ஒவ்வொரு ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேர இடைவெளியில், இக்கருவி இரவு வானத்தின் எட்டு இடங்களில் இருந்து உயர் ஆற்றல் ஃபோட்டான்களை உள்ளெடுக்கின்றது. இதன் மூலமே இந்த அறிய புகைப்படத்தை இக்கருவி வெளியிட்டிருக்கின்றது.

இப்புகைப்படத்திலுள்ள ஒவ்வொரு வளைந்த கோடுகளும் கருவி ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்தினை படமெடுக்க அசையும்போது உருவானதாகும். ஆனால், பெரிய ‘பிரகாசிமான புள்ளிகளை’ பார்கும்போதே இதைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரிக்கின்றது. அவற்றின் பிரகாசம் அதிகமாக இருப்பதால் NICER கருவி அந்த இடத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறது மற்றும் இந்த இடங்களிலிருந்து எக்ஸ்-ரே கதிர்வீச்சு தாராளமாக வெளிப்படுகின்றது.

அநேக இடங்களில் நியூட்ரான் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும் இறந்த சூரியன்களே இவ்வாறு அதிகமான எக்ஸ்-ரே கதிர்வீச்சை வெளியேற்றுகின்றன. இவை மிகவும் அடர்த்தியானவை என்பதால் காலபோக்கில் கருந்துளையாகவும் மாற வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், அதற்கு அதிக சக்தி தேவைப்படும். பிரச்சனை என்னவென்றால், அது எவ்வாறு நடைபெறும் என்றும், நியுட்ரான் நட்சத்திரங்களின் சரியான அளவுகளும் உறுதியாக அறியப்படவில்லை. அவைகளின் துல்லியமான அளவு தெரிந்தால் அந்நட்சத்திரங்களின் உள்ளே நடக்கும் மாற்றங்கள் பற்றி இன்னும் சொல்ல முடியும். இந்த கருவி மூலம் வெறும் 5 சதவீதம் துல்லியமான அளவையே நிர்ணயிக்க முடியும் என நம்பப்படுகிறது.

ஆனால், அந்த நியூட்ரான் நட்சத்திரங்களில் சில விரைவாக சுழலும் தன்மை கொண்டன. இவை பல்சர் (Pulsars) என அழைக்கப்படுகின்றன. அவை ஒரு கலங்கரை விளக்கம் போல் தனது கதிர்வீச்சுகளை எல்லா இடங்களுக்கும் வெளியிடுவதால் அவற்றின் துல்லியமான இடத்தை கண்டுபிடிக்க விண்வெளி வீரர்களுக்கு வசதியாக இருக்கின்றது.

“நாங்கள் படிப்படியாக முழு வானத்திற்கும் ஒரு புதிய எக்ஸ்-ரே படத்தை உருவாக்கி வருகிறோம், மேலும் இது NICER இன் இரவு நேரங்களைப் பற்றி தெரியாத ஆதாரங்களை வெளிப்படுத்தும்” என NASA கூறுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இவ்வகையான கருவிகளின் மூலம் நாம் முழு பிரபஞ்சத்தையும் இலகுவாக ஆராய்ந்து எமக்கு தெரியாமலிருக்கும் பல விடயங்களை கண்டுபிடிக்க கூடியதாய் இருக்கும்.