பல கோடி மக்களுக்கு உதவும் புதிய சூரிய மின் ஆற்றல்!

மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்கக்கூடிய புதிய சூரிய மின் ஆற்றல்!

சூரிய மின்கலங்களில் மேலதிகமாக வெளியேறும் கழிவு வெப்பத்தால் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படும் ஒரு சிறிய சாதனம் ஒரு நாள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடும்.

சவூதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு நமது எதிர்காலத்தை அச்சுறுத்தும் நீர் மற்றும் மின்சார ஆற்றலுக்கு அதிகரிக்கும் அழுத்தங்களை எளிதாக்குவதாக உறுதியளிக்கிறது.

இந்த இரண்டு வளங்களும் நாம் எல்லோரும் எந்நாளும் பயன்படுத்திடும் வசதிகள் ஆகும். ஆனால் உலகெங்கிலும் 780 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது சுத்தமான தண்ணீரை எளிதில் பெற்றுக்கொள்வதில்லை. இன்றும் பல மக்களுக்கு ஒரு நிலையான மின்சார வசதி இல்லை.

எதிர்காலத்தில் நீர் மற்றும் மின்சாரத்தை இழப்பது என்பது, சமூகங்களை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் நோய்களுக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பயிர்களை வளர்ப்பது, கால்நடைகளை வளர்ப்பது அல்லது உணவு மற்றும் மருந்துகளின் பங்குகளை பராமரிப்பது கடினமாக்குகிறது.

ஒப்பீட்டளவில் சுத்தமான தண்ணீர் இல்லாவிடின் மின்சக்தியை உருவாக்க தேவையான நீராவியை திறம்பட உருவாக்க முடியாது. மேலும் வசதியான மின்சக்தி இல்லாமல், நீரை தூய்மையாக்குவது கடினமான ஒரு விடயம்.

சூரிய கலங்களின் புலங்கள் மூலம் தொலைதூர, வறண்ட இடங்களில் உள்ள மக்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு வர முடியும். ஆனால் அவை தூசியினால் மாசுபடும் போது அதன் ஆற்றலை இழக்கிறது. அதற்காக அவற்றை தண்ணீரில் மூழ்கடித்து உபயோகிப்பது தூசியை போக்க ஒரு நல்ல வழியாகும். இதனை அத்தகைய வறண்ட இடங்களில் எளிதில் செய்ய முடியாது.

இந்த சமீபத்திய திட்டத்தின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தும் ஒளிமின்னழுத்த மின்கலத்தை மாற்றி வடிவமைப்பதன் மூலம் இரு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒளிமின்னழுத்தங்களை நீர் தூய்மையாக்கலுடன் இணைப்பது புதிதல்ல. உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜீரோ மாஸ் வாட்டர் எனப்படும் நிறுவனம் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறை பயனுள்ளதாக இருப்பினும் இதுபோன்ற சாதனங்கள் கச்சிதமாகவும் மலிவுடனும் இருக்க வேண்டும்.

ஒரு தெளிவான நாளில் ஒளிமின்னழுத்த மின்கலத்தால் சேகரிக்கப்பட்ட சூரிய ஒளியில் 10 சதவிகிதத்திற்கும் மேலானது போதியளவு மின்சாரத்தை உருவாக்குகின்றது. இது ஒரு வழக்கமான சூரிய ஒளியினால் மின்சாரம் பெறும் தொழிநுட்பம் ஆகும். மீதமுள்ள சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக மாறும். இது வழக்கமாக வீணாகிவிடும். அந்த வெப்பம் ஆவியாதல் மற்றும் ஒடுக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

இந்த சமீபத்திய சாதனத்தின் பொறியியலாளர்கள் தங்கள் கலத்தின் ஆற்றல் வெளியீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் மிகவும் தரமான சிலிக்கான் ஒளிமின்னழுத்த கலத்தின் கீழ்ப்பகுதியில் நீரை வடிகட்டுவதற்கான கூறுகளை இணைத்துள்ளனர்.

இந்த சாதனத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் வழக்கமான சூரிய ஒளியின் மூலம் நீரை வடிகட்டலாம் என்று கண்டறிந்துள்ளனர். இது சாதாரண நீரை விட ஐந்து மடங்கு அளவு சுத்தமான நீரை உற்பத்தி செய்யும் எனக் கூறுகின்றனர்.

இந்த வடிகட்டுதல் சாதனத்தின் ஒரு சதுர மீட்டர் ஒரு மணி நேரத்திற்கு 1.6 லிட்டர் கடல்நீரை வடிகட்டுவதாகக் காட்டப்பட்டது. இவை அனைத்தும் ஒளிமின்னழுத்த மின்கலத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவிற்கு இடையூறு இல்லாமல் செய்யப்படுகிறது.

இந்த சாதனத்தின் மூலம் கோட்பாட்டளவில் 2017 ஆம் ஆண்டில் பயன்படுத்திய குடிநீரில் 10 சதவீதத்திற்கு மேல் வடிகட்ட முடியும். இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் சாதனத்தின் செயல்திறன் மற்றும் மலிவு ஆகியவற்றிற்கான வழிகளை ஆராய்வது ஆராய்ச்சி குழுவின் அடுத்த கட்டமாகும். இதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட நீர் தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

எனவே இச்சாதனத்தை முறையாகச் செய்து மலிவாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடியவாறு பெற்றுத் தந்து இந்த கண்டுபிடிப்பில் வெற்றி பெற நாம் அந்த ஆராய்ச்சியாளர்களை வாழ்த்துகிறோம்.