உலகில் நீங்கள் பயணிக்க வேண்டிய இடங்கள் : தாய்வான்

உலகெங்கிலும் உங்கள் விருப்பத்துக்கேற்ப பயணம் செய்ய பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றில் அழகானதும் பாதுகாப்பானதுமான இடத்தைத் தேர்வு செய்வது சவாலானது. காட்சிகள், கலாச்சாரம், உணவு, தங்குமிட விருப்பங்கள் மற்றும் பணத்திற்கான மதிப்பு போன்ற விடயங்களையும் கருத்தில் கொண்டே இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனை இலகுவாக்க, நீங்கள் அறிந்திராத ஆனால் பார்ப்பதற்கு மிக அழகான பல இடங்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அந்த பட்டியலில் இன்று நாம் பார்க்கப்போவது தாய்வான் நாடு ஆகும்.

தாய்வானின் தலைநகரான தாய்பே-ஐ முதலில் பார்வையிடும் போது மிகப்பெரிய கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் நியான் விளக்குகள் என்ற எல்லாம் சேர்ந்து சனநெரிசலான பெருநகரமாகத் தெரியும். ஆனால் சிறிது மெதுவாகச் செல்லும் போது இந்த சலசலப்பான நகரத்தின் அழகை நீங்கள் விரைவில் கண்டுபிடிப்பீர்கள். தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்வான் தேசிய அருங்காட்சியகம் மற்றும் தேசிய வரலாற்று அருங்காட்சியகம் போன்ற அருங்காட்சியகங்கள் சீனக் கலையின் புதையல்களைக் கொண்டுள்ளன.

சியாங் கை-ஷேக் நினைவு மண்டபம் ஒரு சுயாதீன தாய்வானின் முதல் ஜனாதிபதியை நினைவுகூர்கிறது. மேலும், இது சீனாவுடனான நாட்டின் சங்கடமான உறவைக் குறிக்கிறது. தாய்வானை மீண்டும் “ஒரு சீனா” என்று சீனாவிடம் பணிய வைப்பதற்கான வற்புறுத்தலையும், தாய்வானின் சமீபத்திய தேர்தல்களில் அதன் தலையீட்டையும் கருத்தில் கொண்டு, இந்த தேசத்தைப் பார்வையிட இது ஒரு நல்ல தருணம் என்று நாம் நினைக்கிறோம்.

அருங்காட்சியகங்கள் பயனுள்ளது என்றாலும், தாய்பே-இல் கழிக்கப்படும் நாளின் சிறந்த பகுதி சூரியன் மறைந்த பிறகே தொடங்குகிறது. நகரத்தின் இரவு சந்தைகள் சுவாரஸ்யமான மற்றும் வினோதமாக உண்ணக்கூடிய உணவுகள் நிறைந்தவை. ஷிலின் (Shilin) இரவுச் சந்தையில், புளிப்புச் சுவையான பன்னீர் பிரபலமானது மற்றும் சுவையான மோச்சி (Mochi) எனப்படும் உணவிற்காக நிங்சியா (Ningxia) இரவுச் சந்தைக்குச் செல்லலாம்.

பாம்புச் சந்து (Snake Alley) என்றும் அழைக்கப்படும் ஹுவாக்ஸி (Huaxi) இரவுச் சந்தையில், நீங்கள் ஒரே இடத்தில் எங்கும் பார்த்திராத அளவு அதிகமான உயிருள்ள அல்லது இறந்த பாம்புகளை காணலாம். மேலும், இங்கு சமைத்த பாம்பு முதல் விலாங்கு மீன் சூப் வரை அனைத்தும் விற்கப்படுகிறது. தாய்பே-இல் ஏராளமான சிறந்த சீன உணவு வகைகளை வழங்கும் உணவகங்கள் உள்ளன. இவற்றில் ரோ (Raw) மற்றும் டின் டாய் ஃபங் (Din Tai Fung) என்ற உணவகங்களை சுவை பற்றிய எந்தவித தயக்கமுமின்றி அணுகலாம்.

தாய்பே-இன் மற்றொரு அம்சம், அதைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த மலைகள் ஆகும். நகருக்கு வெளியே, யாங்மின்ஷன் (Yangminshan) தேசிய பூங்காவில் அதனை சுற்றிப் பார்ப்பதற்கான அழகிய வழித்தடங்களும் வெப்ப நீரூற்றுகளும் நிறைந்துள்ளது. இந்த தேசிய பூங்கா இந்நாட்டிலுள்ள முக்கியமான 14 தேசிய வனப்பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளது. இங்கு ஹைகிங், மவுண்டன் பைக்கிங் மற்றும் ராஃப்டிங் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

தாய்வான் தீவின் வடக்கிலிருந்து தெற்கு முனை வரை அந்த அரசாங்கத்தினால் அழகிய பாதைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது தவிர, தாய்வானின் சிறிய பெங்கு (Penghu) தீவுகள், அதற்கும் சீனாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. சர்ஃபிங்கிற்கும் (Surfing) டைவிங்கிற்கும் (Diving) இந்த தீவுகள் மிகப் பிரபலமானது. மற்றொரு நகர்ப்புற அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருந்தால், தாய்வானின் தெற்கு கடற்கரை நகரமான கஹோசியுங்-இலுள்ள (Kaohsiung) கஃபேக்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்குச் செல்லலாம்.

இது மட்டுமல்லாமல், தாய்வானில் பார்வையிட பல இடங்கள் உள்ளன. நாம் நேரடியாகச் சென்று பார்வையிடும் பொழுது இவை யாவற்றையும் ஒரு புது அனுபவமாக உணர்வோம்.