உலகில் நீங்கள் பயணிக்க வேண்டிய இடங்கள் : வட கனடா

உலகெங்கிலும் உங்கள் விருப்பத்துக்கேற்ப பயணம் செய்ய பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றில் அழகானதும் பாதுகாப்பானதுமான இடத்தைத் தேர்வு செய்வது சவாலானது. காட்சிகள், கலாச்சாரம், உணவு, தங்குமிட விருப்பங்கள் மற்றும் பணத்திற்கான மதிப்பு போன்ற விடயங்களையும் கருத்தில் கொண்டே இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனை இலகுவாக்க, நீங்கள் அறிந்திராத ஆனால் பார்ப்பதற்கு மிக அழகான பல இடங்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அந்த பட்டியலில் இன்று நாம் பார்க்கப்போவது கனடாவின் வட பகுதியைப் பற்றி ஆகும்.

அடர்ந்த காடுகளுடன் களங்கமற்ற இயற்கையின் சிறப்பைக் கொண்ட வட கனடாவின் பிரதேசங்களைப் பார்க்கும் அனுபவத்தை நீங்கள் உலகில் எங்கும் பெற முடியாது. நீங்கள் கொஞ்சம் குளிரான காலநிலையை பொருட்படுத்திக் கொள்பவராக இருந்தால் இந்த இடம் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும்.

இங்குள்ள நுனாவூட் (Nunavut), யூகோன் பிரதேசம் (Yukon Territory) மற்றும் வடமேற்கு பிரதேசங்களின் பெயரிடப்படாத வனப்பகுதிகள், பல நாட்டு தேசிய பூங்காக்களை மிஞ்சுகிறது. ஒரே நேரத்தில் உயரமான சிகரங்கள் மற்றும் பனி மூடிய கடற்பரப்பு ஆகிய இரண்டையும் பார்க்க முடிவதோடு, இங்கு நடைபயணம் மேற்கொண்டு முகாமிட்டு தங்கவும் முடிகின்றது.

நீங்கள் நுனாவூட்டில் துருவ கரடிகளைக் கண்டு மகிழ்ந்து பின் முற்றிலும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பசுமை ஆற்றல் மூலம் கட்டப்பட்ட ஆர்க்டிக் ஹேவன் வைல்டர்னஸ் (Arctic Haven Wilderness) லாட்ஜில் தங்க முடியும். கொஞ்ச நேரம் மிதமாக உணர வேண்டுமாயின் வெப்பக் காற்று பலூனில் சவாரி செய்யலாம்.

நுனாவூட்டின் தலைநகரான இகலூயிட்டில் (Iqaluit), ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 24 மணி நேர சூரிய ஒளியின் கீழ் வருடாந்திரம் நடைபெறும் அலியானைட் விழாவில் நீங்கள் இன்யூட் கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் குளிர்காலத்தில் சென்றாலும் கூட, வியக்கத்தக்க வகையில் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள யெல்லோனைஃப் (Yellowknife) எனும் ஊரில் பல உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் ஒரு சவாலுக்கு தயாராக இருந்தால் மற்றும் கடும் குளிரை பொறுத்துக்கொள்ள தயாராக இருந்தால் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வடமேற்கு பிராந்தியங்களின் முக்கியமான இடமான துக்கிற்குச் (Tuk) செல்லுங்கள்.

2017 ஆம் ஆண்டு வரை, நாட்டின் வடக்கு கடற்கரையின் எல்லையான துக்டோயக்துக் கிராமத்திற்கு பனிப்பாறை கொண்ட ஏரிகள் மற்றும் பனி கரைகள் போன்றவற்றைக் கொண்ட இனுவிக் நகரத்தினூடாக செல்லும் பனிக்கட்டி சாலையின் மூலமே செல்ல முடியும். ஐஸ் ரோடு டிரக்கர்களின் உதவி இல்லாமல் ஒரு சிறிய தூரத்தை கூட உங்களால் அடைய இயலாது. ஆனால் இப்போதும் இந்த புதிய சாலையில் பயணிப்பதும் இலகுவான விடயமல்ல, ஆனால் இது ஒரு சாகசமாகும். மேலும், வட கனடாவிற்கு உங்கள் வருகையை வரவேற்கும் வகையில் பியூஃபோர்ட் கடலை ஒட்டிய கரைவிளிம்பிலிருந்து அக்கடலின் அழகை ரசிக்கலாம்.