புற்றுநோயை அழிக்கும் புதிய லேசர் தொழிநுட்பம்!

ஆர்கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று வெற்றிகரமாக புற்றுநோய் கலங்களை கண்காணிக்க மற்றும் அவற்றை கொல்ல ஒரு லேசர் சோதனையை நடத்தியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த சிகிச்சையை தோலுக்கு வெளியே வைத்தே செய்யலாம், அதாவது உடம்பில் ஒரு கீறல் கூட ஏற்படுத்தாமல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கலாம்.

முற்றிலும் அழிக்க முடியாத நிலையில், “இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் பரவுவதை கணிசமாக தடுக்கிறது,” என்று Science Translational Medicine எனும் பத்திரிகை எழுத்தாளர் விளாடிமிர் ஜாரவ் சொல்கிறார்.

புற்றுநோயால் இறப்பதற்கு முதன்மை காரணி அவை விரைவாக உடலினுள் பரவுவதே ஆகும். இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கம் அவை பரவும் முன் அந்த கலங்களை அழிப்பதாகும்.

இரத்த ஓட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் புற்றுநோய்க் கலங்கள் மீது ஒரு பிரகாசமான லேசர் ஒளியை உடம்புக்கு வெளியே வைத்து பாய்ச்சுவதன் மூலம் இந்த புற்றுநோய் கலங்கள் சாதாரண கலங்களை விட அதிக வெப்பத்தை உள்வாங்கும். அப்போது அவை விரிவடைந்து அழிந்து விடுகின்றன.

“லேசர் ஒளியின் பயன்பாடு, நோய் கண்டறிதல் மற்றும் பல சிகிச்சைகள் என்பவற்றில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, இருப்பினும், பெரிய அளவிலான ஒளிக்கதிர்கள் பல மருத்துவ பயன்பாடுகளில் பயனற்றதாக இருக்கின்றன,” என்று ஜாரவ் 2017 ஆம் ஆண்டின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆனால் சிறிய அளவிலான ஒளிக்கதிர்களை பயன்படுத்தி நாம் இந்த சிகிச்சையை செய்யலாம். அவற்றின் முடிவுகளும் நம்பிக்கைக்குரியவை. “ஒரு நோயாளியில், நாங்கள் 96 சதவீத புற்றுநோய் கலங்களை அழித்தோம்” என்று ஜாரவ் கூறினார். இந்த சிகிச்சையை அவர்கள் லேசர் ஒளியின் அதிகபட்ச சக்தியை பயன்படுத்த முன்பே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இது லேசர் ஒளியை முதன் முதலாக பயன்படுத்தப்படும் சாதனம் அல்ல. ஆனால் மனிதர்களின் கைகளை பயன்படுத்தி லேசர் மூலம் சிகிச்சை செய்யப்பட்ட முதல் சாதனம் இதுவாகும். இந்த சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்ட பல சாதனங்கள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. இதில் மிசிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மணிக்கட்டில் அணிந்து சிகிச்சை செய்யும் ஒரு சாதனமும் அடங்கும்.

ஆனால் இந்த புதிய சாதனம் மற்றொரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது. இது ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டர் இரத்தத்தை ஸ்கேன் செய்யும் வல்லமை கொண்டது.

எதிர்காலத்தில் கொடிய நோய்களை அழிக்க இது போன்ற இலகுவான சிகிச்சை முறைகள் பல வரக்கூடும்.