இருதய நோய்களை கண்காணிக்கும் ஆப்பிள் கைக்கடிகாரம் 4!

ஆப்பிள் வாட்ச் உண்மையில் எதற்காக என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், அது இனி ஒரு கேள்வியாக இருக்க முடியாது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் வெளியிட்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, கடிகாரத்தின் மிக முக்கியமான அம்சங்களில் சிலவற்றில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு செயல்பாடுகள் மிக முக்கியமானவை. எலக்ட்ரோ கார்டியோகிராம் அல்லது ஈ.சி.ஜி அளவீடுகளை வழங்கும் அமெரிக்காவின் முதல், மருத்துவ நிலையங்களில் அல்லாமல் வெளியில் பரீட்ச்சிக்கக்கூடிய சாதனங்களில் இந்த புதிய கடிகாரம் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் வாட்ச் ஈ.சி.ஜி அம்சத்திற்கும், ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் இதய நோயைக் கண்டறியும் புதிய அம்சத்திற்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.

ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் (AFib அல்லது AF என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியா) ஆகும். இது இரத்த உறைவு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் நோய் ஆகும்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இல் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள புதிய மின்முனைகள் ஈசிஜி பயன்பாட்டுடன் இணைந்து செயல்படுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு மருத்துவச்சாலையில் காணப்படும் ஈ.சி.ஜி. இயந்திரத்திற்கு ஒத்த பதிவை எடுக்கின்றது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பயனரின் இதயம் முழுவதும் மின் சமிக்ஞைகளை அளவிட அனுமதிக்கிறது. 30 விநாடிகளுக்குப் பிறகு, ஈ.சி.ஜி பயன்பாடு பயனரின் இதய தாளத்தை வைத்து அவரின் இதய நிலைமைகளைப் பற்றி கூறி விடுகின்றது.

அதுமட்டுமல்லாமல், பயனர் கீழே விழுந்தால் இந்த கடிகாரம் அதனைக் கண்டறிந்து அவர் சிறிது நேரத்திற்கு நகரவில்லை என்றால் உடனே அவசர அழைப்பிற்கு தொடர்பு கொள்கிறது. உங்கள் இதயத் துடிப்பு மிகக் குறைவாக இருந்தாலோ அல்லது ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் நிகழ்வுகளைக் கண்டறிந்தாலோ, இந்த கைக்கடிகாரம் முன்னரே ஒரு அறிவிப்பை அனுப்புகிறது. இதன் மூலம் இதை அணிபவர்கள் உடனியாக தங்கள் வைத்தியரை நாடி தங்கள் இதயம் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

அமெரிக்காவில் 2.7 முதல் 6.1 மில்லியன் மக்கள் வரை ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் எனும் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இது அமெரிக்காவில் மட்டுமில்லாமல் மற்றைய நாடுகளிலும் அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தொழிநுட்பத்தின் மூலம் நாம் வீட்டிலேயே எமது இருதய ஆரோக்கியத்தை சரி பார்த்துக்கொள்ள முடிகின்றது. இனி வரும் காலங்களில் இது போன்று வீட்டிலேயே நோயை கண்காணிக்கும் சாதனங்களை நாம் வெகுவாக எதிர்பார்க்கலாம்.