சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) வரலாறு மற்றும் காலவரிசை

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் பூமியைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம் ஆகும். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம் இதுவாகும். இதனை ஆங்கிலத்திலே International Space Station (ISS) என்று அழைப்பர்.

சர்வதேச விண்வெளி நிலையம் முழுமையாகக் கட்டப்பட 10 ஆண்டுகள் ஆகியது மற்றும் 30 க்கும் மேற்பட்ட பயணங்கள் விண்வெளிக்கு எடுக்கப்பட்டன. இது 15 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து விண்வெளி நிறுவனங்களின் அறிவியல் மற்றும் பொறியியல் ஒத்துழைப்பின் விளைவாகும்.

இந்த விண்வெளி நிலையம் ஏறக்குறைய ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுடையது மற்றும் 460 டன் எடையைக் கொண்டது. இது ஒரு நிரந்தரமாக பணியாற்றும் தளமாக பூமியிலிருந்து 250 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இது ரஷ்ய விண்வெளி நிலையமான மிர்-ஐ (Mir) விட நான்கு மடங்கு பெரியது மற்றும் அமெரிக்க ஸ்கைலாப்பை விட ஐந்து மடங்கு பெரியது.

ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டும் யோசனை ஒரு காலத்தில் அறிவியல் புனைகதையாக இருந்தது. 1940 களில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நிர்மாணிப்பது நம்மால் அடையப்படக்கூடும் என்பது தெளிவாகும் வரை கற்பனையில் மட்டுமே இருந்தது. 1950 களில் விண்வெளி யுகம் தொடங்கியவுடன், “விண்வெளி விமானங்கள்” மற்றும் நிலையங்களின் வடிவமைப்புகள் பிரபலமான ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் அடிப்படை நிலையம் 1969 ஆம் ஆண்டில் விண்வெளியில் இரண்டு ரஷ்ய சோயுஸ் விண்கலங்களை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற நிலையங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களாலும் அமெரிக்க விண்கலங்களின் உதவியுடனும் 1998 இல் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது.

சமீப காலம் வரை, ISS இல் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி இடம் பெரும்பாலும் அரசாங்க முன்முயற்சிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ISS இன் வணிக மற்றும் கல்வி பயன்பாட்டிற்கான புதிய வாய்ப்புகள் இப்போது ISS தேசிய ஆய்வகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் வரலாற்று காலவரிசை

அமெரிக்க ஜனாதிபதி ரீகன் ISS ஐக் கட்ட திட்டமிட்டார்

ஜனவரி 25, 1984

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கூட்டரசு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க நாசாவிற்கு அறிவுறுத்தியது.

ISS இன் முதல் பாகங்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டது

நவம்பர் 20, 1998

ISS இன் முதல் பாகம் Zarya (“சூரிய உதயம்”) என்ற ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணிற்கு ஏவப்பட்டது.

அமெரிக்காவால் செய்யப்பட்ட முதல் ISS பாகங்கள் ஏவப்பட்டது

டிசம்பர் 4, 1998

சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட முதல் ISS இன் பாகங்கள் அமெரிக்க விண்கலமொன்றால் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசித்த முதல் குழு

நவம்பர் 2, 2000

விண்வெளி வீரர்கள் பில் ஷெப்பர்ட், யூரி கிட்சென்கோ மற்றும் செர்ஜி கிரிகலேவ் ஆகியோர் பல மாதங்கள் நிலையத்தில் தங்கியிருந்த முதல் குழுவினர் ஆவர்.

அமெரிக்காவின் ஆய்வகத் தொகுதி சேர்க்கப்பட்டது

பிப்ரவரி 7, 2001

டெஸ்டினி எனப்படும் அமெரிக்க ஆய்வக தொகுதி நிலையத்தின் ஒரு பகுதியாக மாறியது. இது இன்னும் அமெரிக்காவின் முதன்மை ஆராய்ச்சி ஆய்வகமாக தொடர்கிறது.

அமெரிக்க ஆய்வகத் தொகுதி புதிய அமெரிக்க தேசிய ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்டது

2005

மற்றைய அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பயன்பாட்டை அதிகரிக்க ISS இன் அமெரிக்க பகுதியை நாட்டின் புதிய தேசிய ஆய்வகமாக காங்கிரஸ் நியமித்தது.

ஐரோப்பிய ஆய்வகம் ISS உடன் சேர்க்கப்பட்டது

பிப்ரவரி 7, 2008

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கொலம்பஸ் ஆய்வகம் நிலையத்தின் ஒரு பகுதியாக மாறியது.

ஜப்பானிய ஆய்வகம் ISS உடன் சேர்க்கப்பட்டது

மார்ச் 11, 2008

முதல் ஜப்பானிய கிபோ ஆய்வக தொகுதி நிலையத்தின் ஒரு பகுதியாக மாறியது.

ISS இன் பத்தாம் ஆண்டு நிறைவு நாள்

நவம்பர் 2, 2010

ISS அதன் தொடர்ச்சியான மனித வருகையின் 10 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2000 ஆம் ஆண்டில் எக்ஸ்பெடிஷன் 1 எனும் விண்கலத்தின் வருகையிலிருந்து 202 பேர் இந்த நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர்.

நாசா கூட்டுறவு ஒப்பந்தத்தை வெளியிட்டது

பிப்ரவரி 14, 2011

நிர்வாக பங்குதாரருக்கான கூட்டுறவு ஒப்பந்த அறிவிப்பை நாசா வெளியிட்டது.

நாசா ISS இன் தேசிய ஆய்வகத்தைத் தேர்ந்தெடுத்தது

ஜூலை 13, 2011

ISS தேசிய ஆய்வகத்தை நிர்வகிக்க விண்வெளி அறிவியல் முன்னேற்றத்திற்கான மையத்தை நாசா தேர்வு செய்தது.

முதல் ISS தேசிய ஆய்வக ஆராய்ச்சி விமானம்

2013

புதிய மருந்துகளின் வளர்ச்சிக்கு பயனுள்ள முப்பரிமாண கட்டமைப்புகளைக் கொண்டு விண்வெளியில் புரதங்களை படிகங்களாக வளர்க்கலாம் எனக் கண்டறியப்பட்டது. ISS தேசிய ஆய்வகம் புரத படிக வளர்ச்சி (P.C.G.) தொடர்பாக, பல விண்கலங்களை 2013 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பத் தொடங்கியது. இது ISS இன் தனித்துவமான சூழலைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கிறது.