வால்நட்சத்திரங்கள் எனப்படுவது எமது சூரிய மண்டலத்தில், சிறுகோள்களைப் போன்று சூரியனைச் சுற்றி வரும் சிறிய வான்பொருட்களாகும். இருப்பினும், இவை சிறுகோள்களைப் போலல்லாமல், முதன்மையாக உறைந்த அம்மோனியா, மீத்தேன் அல்லது நீர் ஆகியவற்றால் ஆனவை. மேலும், சிறிய அளவிலான பாறைப் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. இந்த கலவையின் விளைவாக வால்நட்சத்திரங்களுக்கு “அழுக்கான பனிப்பந்துகள்” என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
வால்நட்சத்திரத்தின் பாகங்கள்
சில வால்நட்சத்திரங்கள் அதிக நீள்வட்ட சுற்றுப்பாதைகளைக் கொண்டிருக்கும். அவை சூரியனுக்கு ஒப்பீட்டளவில் நெருக்கமானவை. இவ்வாறு சூரியனுக்கு அருகில் பயணிக்கும் போது இந்த வால்நட்சத்திரங்களில் காணப்படும் பனிக்கட்டிகள் உருகி அற்புதமான பாகங்களாக உருவெடுக்கின்றன. அவை என்னவென்பதை கீழே பார்ப்போம்.
- கரு: ஒரு வால்நட்சத்திரத்தின் கரு, பனி மற்றும் பாறை பொருட்களால் ஆனது. பெரும்பாலான வால்நட்சத்திரங்களின் கரு சுமார் 10 முதல் 100 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது, இருப்பினும் அவற்றின் அதிகபட்ச விட்டம் 100 கி.மீ ஆகும்.
- கோமா: வால்நட்சத்திரம் வெப்பமடையும் போது கருவைச் சுற்றி உருவாகும் வாயுக்களின் மேகம் கோமா என அறியப்படுகிறது. இந்த வாயுக்கள் பொதுவாக நீராவி, அம்மோனியா, கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றின் கலவையாகும்.
- தூசியாலான வால்: வால்நட்சத்திரத்தின் தூசி வால் வாயுக்களால் ஆனது மற்றும் வால்நட்சத்திரம் சூடாகும்போது சிறிய தூசி துகள்கள் அதன் கருவிலிருந்து பறக்கின்றன. இதுவே வால்நட்சத்திரத்தின் புலப்படும் பகுதியாகும்.
- அயன் வால்: அயன் வால் என்பது அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுக்களின் நீரோட்டமாகும். அவை சூரியக் காற்றுடனான வால்நட்சத்திரத்தின் தொடர்பின் விளைவாக சூரியனுக்கு எதிர்த்திசையில் வீசப்படுகின்றன.

வால்நட்சத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன?
வால்நட்சத்திரங்களை மனித இனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கண்டிருக்கிறது. இருப்பினும் விஞ்ஞானிகள், ஒவ்வொரு முறையும் ஒரு வால்நட்சத்திரம் சூரியனை நெருங்கிச் செல்லும்போதும் அதன் ஆயுட்காலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கலாம் எனக் கணித்துள்ளனர். சூரிய மண்டலத்தின் ஆயுட்காலத்துடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் இது ஒரு சிறிய எண்ணிக்கையாகும்.
ஆகவே விஞ்ஞானிகள், இன்றும் சூரிய குடும்பத்தில் வால்நட்சத்திரங்கள் இருந்தால் அவற்றின் பயணம் தொடங்குமிடம் எங்காவது இருக்க வேண்டும், இல்லையெனில் வால்நட்சத்திரங்களின் ஆயுள் நீண்ட காலத்திற்கு முன்பே முடிந்திருக்கும் எனக் கூறுகின்றனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து சூரிய மண்டலத்திலுள்ள பொருள்களையும் நாங்கள் கண்டுபிடித்திருப்பதால், புதிய வால்நட்சத்திரங்கள் உருவாக எஞ்சியிருக்கும் ஒரே இடம் சூரிய மண்டலத்திற்கு வெளியில் ஆகும் என கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் போது கண்காணிக்கப்பட்ட வால்நட்சத்திரங்களின் சுற்றுப்பாதைகள், வால்நட்சத்திரங்கள் உற்பத்தியாகும் இடம் சூரிய குடும்பத்தின் வெளியில் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல் இரண்டு பகுதிகளில் உள்ளன என்று பரிந்துரைத்தன.
இந்த பிராந்தியங்களில் முதன்மையானது கைபர் பெல்ட் (Kuiper Belt) என அழைக்கப்படுகிறது. இது உள் சூரிய குடும்பத்தில் காணப்படும் சிறுகோளின் பெல்ட்டைப் போன்ற வால்நட்சத்திரங்களை உற்பத்தி செய்யும் இடமாகும். இந்த பிராந்தியத்தில் தோன்றும் வால்நட்சத்திரங்கள் ஒப்பீட்டளவில் குறுகிய சுற்றுப்பாதைக் காலங்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் கிரகங்களைப் போலவே சூரியனைச் சுற்றி ஒரே சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
ஓர்ட் கிளவுட் (Oort Cloud) என்று அழைக்கப்படும் இரண்டாவது பகுதி, கைபர் பெல்ட்டை விட தொலைவில் உள்ள ஒரு பகுதியில் காணப்படும் ஒரு கோள வடிவான ஓடு ஆகும். இந்த பகுதியில் இருந்து வரும் வால்நட்சத்திரங்கள் கைபர் பெல்ட்டை விட மிக நீண்ட சுற்றுப்பாதைக் காலங்களைக் கொண்டுள்ளன. கூடுதலாக, ஓர்ட் கிளவுட்டில் உள்ள வால்நட்சத்திரங்களின் சுற்றுப்பாதை எமது கிரகங்களின் சுற்றுப்பாதையைப் போன்று சாய்ந்து இருக்கலாம்.
இந்த பிராந்தியங்களில் ஒன்றில் தோன்றும் ஒரு வால்நட்சத்திரம் எவ்வாறு உள் சூரிய மண்டலத்திற்குள் வரும் ஒரு சுற்றுப்பாதையை பெறுகிறது என்பதைப் பார்க்கும் போது, தற்போதைய கோட்பாடுகள் ஒரு வால்நட்சத்திரம் மற்றொரு வால்நட்சத்திரத்தோடு மோதுவதன் மூலம் இந்த புதிய சுற்றுப்பாதையைப் பெறுகிறது என்று முன்மொழிகின்றன.

பிரபலமான வால்நட்சத்திரங்கள்
பல பிரபலமான வால்நட்சத்திரங்கள் உள்ளன. சில பண்டைய மனிதர்களுக்குத் தெரிந்தவை. சில சமீபத்தில் தோன்றியவை.
- ஹேலியின் வால்நட்சத்திரம்: 1705 ஆம் ஆண்டில், அறியப்பட்ட பல வால்நட்சத்திரங்களின் சுற்றுப்பாதைகளைப் பற்றி படிக்கும் போது, எட்மண்ட் ஹேலி 1531, 1607 மற்றும் 1682 ஆம் ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட வால்நட்சத்திரம் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். ஹேலியின் கண்டுபிடிப்பின் விளைவாக, அந்த வால்நட்சத்திரத்திற்கு அவரின் பெயரிடப்பட்டது. இது ஒவ்வொரு 75 முதல் 76 வருடங்களுக்கும் ஒருமுறை தென்படும்.
- ஹேல்-பாப் வால்நட்சத்திரம்: இந்த வால்நட்சத்திரத்தை ஒரு விண்கலம் என்று கலிஃபோர்னியாவில் பெரும்பாலான மக்கள் நம்பினர். ஹேல்-பாப் வால்நட்சத்திரம் 1997 இல் கடைசியாகத் தென்பட்டது. தோராயமாக 2,300 ஆண்டுகளுக்கு இது மீண்டும் வானில் காட்சியளிக்காது. இதற்கு இதன் கண்டுபிடிப்பாளர்களான ஆலன் ஹேல் மற்றும் தாமஸ் பாப் ஆகியோரின் பெயரிடப்பட்டது.
- ஷூமேக்கர்-லெவி 9 வால்நட்சத்திரம்: ஷூமேக்கர்-லெவி 9, எஸ்.எல் 9 என்றும் அழைக்கப்படுகிறது. இது பல வால்நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பு ஆகும். இது வியாழனின் ஈர்ப்பு மூலம் கைப்பற்றப்பட்டு பின்னர் கிரகத்தைப் சுற்றி சுற்றுப்பாதையைத் தொடங்கியது. எவ்வாறாயினும், எஸ்.எல் 9 இன் சுற்றுப்பாதை ஒழுங்கின்மை காரணமாக ஜூலை 16, 1994 இல் வியாழன் மீது மோதியது. இதற்கு அதன் கண்டுபிடிப்பாளர்களான ஜீன் ஷூமேக்கர், கரோலியன் ஷூமேக்கர் மற்றும் டேவிட் லெவி ஆகியோரின் பெயரிடப்பட்டுள்ளது.

வால்நட்சத்திரங்கள் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்
- சில நேரங்களில் வால்நட்சத்திரங்கள் “அழுக்கான பனிப்பந்துகள்” அல்லது “அண்ட பனிப்பந்துகள்” என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் அவை பெரும்பாலும் பனி, பாறை, வாயு மற்றும் தூசி ஆகியவற்றால் ஆனவை.
- வால்நட்சத்திரங்கள் கிரகங்களைப் போலவே சூரியனை நீள்வட்ட பாதைகளில் சுற்றுகின்றன. ஒரு வால்நட்சத்திரத்தின் பாதை எமது சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கிரகங்களையும் விட நீள்வட்டமானது.
- ஒரு வால்நட்சத்திரத்தின் கரு அதன் மொத்த வெகுஜனத்தின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.
- வால்நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் செல்லும்போது ஒரு ஒளிவட்டம் தோன்றும், அது எவ்வாறாயின் சூரிய கதிர்வீச்சு, வால்நட்சத்திரத்தில் உள்ள பனி மற்றும் வாயுவை ஒரு ஒளிவட்டமாக ஆவியாக்குகிறது. இந்த ஒளிவட்டம் வால்நட்சத்திர கோமா என்று அழைக்கப்படுகிறது.
- ஓர்ட் மேகம் என்பது சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியாகும். இது சூரியனிலிருந்து பூமிக்குள்ள தூரத்தில் 50,000-150,00 மடங்கு தூரத்தில் உள்ளது. இது செயலற்ற வால்நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு தோன்றும் சில வால்நட்சத்திரங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன.
- கைபர் பெல்ட் என்பது நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் அமைந்துள்ள செயலற்ற வால்நட்சத்திரங்களின் வளையமாகும். இங்கு உருவாகும் வால்நட்சத்திரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன.
- மிகவும் பிரபலமான வால்நட்சத்திரம் ஹேலியின் வால்நட்சத்திரம் ஆகும். இது குறைந்தது கிறிஸ்துக்கு முன் 240 ஆம் ஆண்டிலிருந்து தென்படுகிறது. அதன் சுற்றுப்பாதை ஒவ்வொரு 76 வருடங்களுக்கு ஒரு முறை பூமியிலிருந்து தெரியும்.
- தற்போது அறியப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட வால்நட்சத்திரங்கள் உள்ளன. நமது சூரிய மண்டலத்தில் ஒரு பில்லியன் வால்நட்சத்திரங்கள் வரை இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- ஒரு பெரிய வால்நட்சத்திரம் தொலைநோக்கி இல்லாமல் பூமியிலிருந்து தெரியும் அளவுக்கு பிரகாசமாக இருக்கும். ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பெரிய வால்நட்சத்திரம் தென்படும்.