நாம் கடந்த பாகத்தில் பார்த்த சிகிச்சைகள் போலவே இந்த பாகத்திலும் உங்கள் அழகை பேண மலிவான இயற்கையான சிகிச்சைகள் சிலவற்றை பாப்போம்.
1. தேவையற்ற முக முடிகளுக்கு சர்க்கரை வாக்ஸ் (Wax)

முகத்திலுள்ள தேவையற்ற முடி பல பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய அழகு பிரச்சனையாகும். எனினும், நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சர்க்கரை வாக்ஸ் மூலம் இதனை இல்லாமல் செய்ய முடியும்.
உங்கள் வழக்கமான வாக்ஸ் செய்யும் முறையிலேயே இதையும் செய்ய வேண்டும். அந்த முறை போலவே இந்த சிகிச்சை முறையும் உங்கள் தேவையற்ற முடியை தாற்காலிகமாகவே நீக்க உதவும், நிரந்தரமாக அல்ல.
- 1 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
- 20-30 விநாடிகளுக்கு மைக்ரோவேவில் அக்கலவையை சூடாக்கவும். பின் அதை ஆறவிடவும்.
- ஒரு தட்டைக்கரண்டியை பயன்படுத்தி, தேவையற்ற முடியுள்ள இடங்களில் கலவையை பூசவும்.
- கலவையை பூசிய இடங்களின் மேல் ஒரு துணி துண்டை வைத்து முடி வளர்ந்துள்ள திசையிலேயே மென்மையாக மசாஜ் செய்யவும்.
- சில வினாடிகள் கழித்து, துணித்து துண்டுகளை முடி வளர்ந்திருப்பதற்கு எதிர் திசையில் வேகமாக நீக்கவும்.
- தேவைப்படின் மீண்டும் இதே முறையில் செய்யவும்.
2. எண்ணெய்த் தன்மையான தோலுக்கு முட்டையின் வெள்ளைக் கரு

எண்ணெய்த் தன்மையான தோல் வேகமாக முதிர்வடைவதில்லை, ஆனால் பராமரிக்க மிகவும் கடினமான தோல் வகையும் இதுவே ஆகும். உடல் தேவையானதை விட அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்யும் போது, அது தோலில் ஒரு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.
மற்றும், எண்ணெய்த் தன்மையுள்ள தோல் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை ஏற்பட ஏற்ற இறக்கமுடைய ஹார்மோன்களும் காரணமாகையால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.
பளபளப்பான எண்ணெய்த் தன்மை கொண்ட முகத்தை மென்மையாக மாற்றுவதற்கு தினமும் உங்கள் முகத்தை சில முறை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சில எளிய வகை சிகிச்சைகளும் உள்ளன.
- முட்டையின் வெள்ளைக்கரு எண்ணெய் தோலுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் மலிவான தீர்வுகளில் ஒன்றாகும். இது அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்ச உதவுகிறது மற்றும் தோலின் நிறத்தை பேண உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக கலக்கி அதை உங்கள் தோல் மீது பூசவும். உலரந்த பின் சூடான நீரில் அதை கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த சிகிச்சையை தொடரவும். முடியுமாயின், முகத்தில் பூசும் முன் முட்டையின் வெள்ளைக்கருவோடு அரைவாசி எலுமிச்சை சாறையும் கலக்க முடியும்.
- மற்றொரு எளிய தீர்வு, உங்கள் தோல் மீது அரைவாசி தாக்களிப் பழத்தை தேய்க்க வேண்டும். தக்காளி பழச்சாறு அதன் வேலையை செய்ய 15 நிமிடங்கள் தேவைப்படும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யலாம். தக்காளியிலுள்ள இயற்கையான எண்ணெய் உறிஞ்சும் அமிலங்கள் அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சிக்கொள்கிறது.
3. வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்

வறண்ட சருமம் என்பது யாரும் விரும்பத்தகாததொன்றாகும். சருமத்தில் போதுமான ஈரப்பதம் இல்லாவிடின் நமைச்சல், உலர்ந்த தோல் திட்டுக்கள், தோல் செதில்களாக மாறுதல் மற்றும் விரிசல் என்பன ஏற்படுகிறது. அரிப்பு ஏற்படுவதை நிறுத்த கடினமாக இருக்கும்போது, தோலின் நிலை இன்னும் மோசமாகக்கூடும்.
தீவிர காலநிலை மாற்றங்களுள்ள இடங்களில் வாழ்தல்; குளிர் காலங்களில் வீட்டினுள் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருத்தல்; நீண்ட நேர வெந்நீர் குளியல்; குளோரின் அதிகமான குளங்களில் நீச்சல்; கடுமையான சவர்க்காரங்களைப் பயன்படுத்துதல்; சூரிய ஒளியின் தாக்கம் வறண்ட சருமத்திற்கான சில காரணங்களாகும்.
வறண்ட சருமத்தை மென்மையாக்குவதற்கு முறையான ஈரப்பதமூட்டுதல் தேவை. இதற்கு, விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் லோஷன்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் சமையலறையில் பல இயற்கையாகவே ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன, அவை பயனுள்ள தீர்வுகளை அளிக்கின்றன.
- ஒரு குளியல் எடுத்துக் கொண்டபின் தினமும் உங்கள் தோலில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது வறண்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் தோல் ஓரளவு ஈரமாக இருக்கும்போது இது அதனை தோலிலே ஈரத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
- உலர்ந்த சருமத்திற்கு மற்றொரு நல்ல இயற்கை மருந்து தேன். இது ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுவதோடு தோலின் வறட்சியை குறைத்து தோலை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. குளியலுக்கு முன் உங்கள் வறண்ட சருமத்தில் தேனை தேய்த்து 10 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் குளிக்கவும். தினமும் இதனை ஒருமுறை செய்யவும்.
4. கரும்புள்ளிகளுக்கு அப்பச்சோடா

டீன் ஏஜ் பெண்கள் எதிர்நோக்கும் இன்னொரு பொதுவான பிரச்சனையானது, தோலிலுள்ள துளைகளின் அடைப்பினால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகும். எண்ணெய்த் தன்மையுள்ள தோல் மற்றும் பெண்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும்.
தோல் பராமரிப்பு நிபுணர் அல்லது தோல் பற்றிய மருத்துவரை அணுகுவதன் மூலம் இரசாயனங்களையும் சில சிகிச்சைகளையும் பயன்படுத்தி கரும்புள்ளிகளை அகற்றலாம். ஆனால், இந்த தீர்வுகள் விலை உயர்ந்தவை.
அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் சில மலிவான தீர்வுகளை முயற்சி செய்யலாம். வீட்டிலுள்ள பொருட்களைப் பயன்படுத்தி தோலிலுள்ள துளைகளை சுத்தம் செய்யலாம்.
- கரும்புள்ளிகளுக்கு சிறந்த மற்றும் மலிவான மருந்து அப்பச்சோடாவாகும். கொஞ்சம் தண்ணீரில் அப்பச்சோடாவை போட்டு ஒரு கலவை செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசவும். சில நொடிகள் உலரவிட்டு பின் கழுவவும். வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.
- காலை உணவிற்கு சாப்பிட பயன்படுத்தும் ஓட்ஸும் கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது. 2 தேக்கரண்டி ஓட்ஸ், 3 தேக்கரண்டி தயிர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஃபேஸ் பேக்கை (Face Pack) தயார் செய்யுங்கள். அதை உங்கள் முகத்தில் தடவி, 5 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் ஈரமான கைகளால் துடைக்கவும். பின்னர் மிதமான சூடான தண்ணீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யவும்.
5. பொடுகுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

பொடுகு மற்றொரு கொடூரமான பிரச்சனையாகும். எந்தவொரு வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை இந்த பொடுகு ஆகும். ஆனால் இது 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டோரில் அதிகமாக உள்ளது.
பொடுகுக்கு காரணம் உச்சந்தலையின் தோல் வறட்சியடைவதாகும் மற்றும் இது செதில்களாக மாறி கொட்டும். இந்த செதில்கள் அடர்ந்த நிற உடையில் கொட்டும் போது, மற்றவர் முன்னிலையில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்தோடு தலையில் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சனையை ஒரு ஆரோக்கியமான முடி பராமரிப்பு வழக்கத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதற்கு நீங்கள் சில எளிய இயற்கை வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.
- கால்வாசி கோப்பை சூடான தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு சிறிதளவை சேர்த்துக் கொள்ளவும்.
- இக்கலவையை உங்கள் உச்சந்தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்து, பின்னர் 30 நிமிடங்கள் உலரவிட்டு கழுவவும்.
- வாரம் ஒருசில முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.
இயற்கையாக வரும் நோய்களை இயற்கையாயாலேயே குணப்படுத்துவோம்! முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்