வீடியோ கேம்களை உருவாக்குவதென்பது பல்வேறு கடினமான முயற்சிகளையும் பல கேம் படைப்பாளிகளின் தியாகங்களையும் கொண்ட ஒரு விடயமாகும். ஒரு வீடியோ கேம் மற்றும் அதன் உலகத்தை உருவாக்கும் உத்வேகம் விளக்கப்பட முடியாதது. ஒரு முழு கேமை உருவாக்கும் இலக்கை அடைய பல்வேறு சவால்களையும் பல கண்டுபிடிக்க முடியாத சிறிய சிறிய பிழைகளையும் கடந்து வர வேண்டியிருக்கும்.
எனவே, நீங்கள் ஒரு சிறந்த கம்ப்யூட்டர் கேம் விளையாட்டாளர் என கருதினால் அல்லது சிறந்த விளையாட்டாளராகுவதற்கு முயற்சித்தால், நீங்கள் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் இங்கே உள்ளன.
1. தனது மகனின் கேம் கதாபாத்திரத்தை (Game Character) அழிக்க பணம் கொடுத்த தந்தை!

ஒரு சீன தந்தை தனது மகனின் ஆன்லைன் கேம் கதாபாத்திரம் ஒவ்வொரு முறை அந்த கேமிற்குள் நுழையும்போதும் அதனை அழிக்க அதே கேமை விளையாடும் மிகசிறந்த விளையாட்டாளர் ஒருவரை நாடியுள்ளார். இதற்கு காரணம் மகன் வேலைக்கு போகாமல் இருப்பதாலும் வீடியோ கேமிலேயே அதிக நேரத்தை செலவிடுவதாலும் ஆகும்.
சில நாட்களின் பின் அந்த விளையாட்டில் தன் கதாபாத்திரம் ஓர் இலக்காக மாறியுள்ளதை தெரிந்து கொண்ட 23 வயது மகனான சியாவோ ஃபெங் தன் தந்தையிடம் கூறியதாவது “நான் விளையாடினாலும் விளையாடவிட்டாலும் எனக்கு எந்த கவலையுமில்லை. நான் இப்போது வேலை தேடவில்லை, எனக்கு பொருத்தமான வேலை கிடைப்பதற்காக காத்திருக்கின்றேன். “
2. உலகின் மிகக் கடினமான வீடியோ கேம்!

1991 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று NES நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Rare நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட எளிதில் வெல்லமுடியாத கேம் தான் Battletoads. இது சிக்கலான வீடியோ கேம்களில் புகழ் பெற்ற ஒரு கேம் ஆகும். இந்த வீடியோ கேமை உருவாக்கியவர்கள், திறமையான விளையாட்டாளர்கள் மிக இலகுவாக இந்த கேமை வெல்ல முடிந்ததை கண்டனர். எனவே இதை ஒரு சிக்கலான கேமாக மாற்றி மீண்டும் வெளியிட்டனர்.
Battletoads கிட்டத்தட்ட தோற்கடிக்கவே முடியாத கேமாகத்தான் உருவாக்கப்பட்டது. விளையாட்டாளர்கள் முழு கவனத்துடன் விளையாடினால் மட்டுமே வெற்றியடைய முடியுமாய் இருந்தது. எனவே மிகச் சிறந்த விளையாட்டாளர்களுக்கு கூட இந்த கேமை முடிக்க 50 நாட்களுக்குள் மேல் தேவைப்பட்டது.
3. பொது நூலகங்களில் வீடியோ கேம்ஸ்!

4 வருடங்களுக்கு முன்னர் லைப்ரரி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை, அமெரிக்காவில் சுமார் 15% நூலகங்கள் இப்போது நூலக கார்டுக்கு (Card) வீடியோ கேம்களை விளையாடவும் அனுமதிக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளது.
நூலகத்திற்கு இளைஞர்களை கவர்ந்திழுக்கும் பொருட்டு இதை செய்வதனால், வீடியோ கேம் விளையாட வருவோர் நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க முற்படுகின்றனர். பெரிய நூலகங்களும் இது ஒரு முக்கியமான மாற்றம் என்று நம்புவதால் இதை நிறுவத் தொடங்கியுள்ளன.
4. “Ghostbusters” எனப்படும் கேமிலுள்ள கதாபாத்திரங்கள்!

2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட Ghostbusters எனும் இந்த வீடியோ கேமில் இதே பெயரில் வெளிவந்த படத்தில் நடித்த நடிகர்களாலேயே கேமின் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இக்கேமின் கதையை எழுதவும் இவர்கள் உதவியுள்ளார்கள்.
5. “Goldeneye 007” கேமை உருவாக்கியவர்கள்!

கோல்டன்அய் 007 (Goldeneye 007) என்ற வீடியோ கேமும் மிக சிக்கலான கேம் ஒன்றாகும். இது 9 புரோகிராமர்கள் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்டது, இதில் 8 பேர் முன்பு வீடியோ கேம் உருவாக்குவதில் துளி கூட அனுபவமில்லாதவர்கள். இக்குழுவில் சிறிதளவு முன்னனுபவம் கொண்ட புரோகிராமரான, மார்ட்டின் ஹோலிஸ் தனது முதல் வீடியோ கேமை கில்லர் இன்ஸ்டிங்க்ட் (Killer Instinct) எனும் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளார். பின்னர், Rare மற்றும் Nintendo நிறுவனங்களுக்கு தனது புதிய வீடியோ கேமின் யோசனை பற்றி கூறியுள்ளார். இந்த யோசனையை அந்நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. ஆனாலும் அதைப் பற்றி அவர்கள் முழுமையான ஆர்வம் காட்டாமலேயே இந்த 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர். இக்குழுவில் உள்ளவர்கள் முன்னனுபவமற்றவர்கள் என்பதால் மார்ட்டின் ஹோலிஸ் இதனை “எலும்புக்கூடு குழு” (Skeleton Team) என்று அழைத்துள்ளார்.
6. தான் சிறுவயதில் விளையாடிய கேம்களை தன் மகனை விளையாட வைத்த தந்தை!

2004 ஆம் ஆண்டு பிறந்த எலியட் என்பவரை அவரது தந்தை ஆண்டி பேயோ 1979 இல் வெளிவந்த Galaxian எனும் கேமில் தொடங்கி அதன் பிறகு வந்த பிரபலமான கேம்களை விளையாட வைத்துள்ளார். இதன் மூலம் எலியட் இக்காலத்தில் வெளிவரும் மிக கடினமான கேம்களை கூட இலகுவாக முடித்துவிடுவதாக கூறப்படுகின்றது.
எலியடின் கேம் பயணத்தில் முதலாவது விளையாட்டான Galaxian அவரது நான்காவது பிறந்த நாளில் விளையாட தொடங்கப்பட்டதாகும். எலியட் விளையாடிய கேம்களின் பெயர்கள் சில இதோ : Galaxian (1979), Rally-X (1980), Bosconian (1981), Dig Dug (1982), Pac-Man (1980), Super Pac-Man (1982), Pac-Man Plus (1982), Pac & Pal (1983), The Atari 2600, NES, SNES மற்றும் பல.
7. ஒலியை மட்டும் பயன்படுத்தி விளையாடப்படும் கேம்!

ஒலியை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் கேம் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரான்ஸிலுள்ள DOWiNO எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இக்கேமானது “A Blind Legend” (குருட்டுப் புராணம்) என பெயரிடப்பட்டுள்ளது. இக்கேமில் ஒரு போர்வீரனின் கதாபாத்திரமே நமக்கு கிடைக்கும். இந்த வீரனின் கண்கள் குருடாக்கப்பட்டு மனைவியும் ஒரு கொடூரமான வில்லனால் கடத்தப்படுகிறது. இதன் பின் தனது செவிப்புல உணர்வுகளை மட்டும் வைத்து மனைவியை தேடிச்செல்வதே கதையாகும்.
விளையாட்டின் ஆடியோ முப்பரிமாண ஒலிப்பதிவு பாணியால், பைனாரல் ஒலி மூலம் ஹெட்ஃபோன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்றைய கேம்களில் நாம் கண்டுகொள்ளாத விடையங்களை கூட இந்த கேமில் நாம் ஆர்வத்துடன் ஆராய்வோம்.
8. வீடியோ கேம் விளையாடுபவர்களின் வயது வரம்பு!

வீடியோ கேம் விளையாடுபவர்களின் வயது வரம்பு என்ன? இந்த கேள்விக்கான பதில் பல்வேறு நபர்களிடையே ஒரு பெரிய விவாதமாக உள்ளது. சிலர் கட்டாயமாக இளைஞர்கள் அல்லது குழந்தைகளின் வயது தான் சரியானது என நம்புகிறார்கள். ஆனால், Entertainment Software Association எனும் சங்கம் 2010 இல் நடத்திய ஓர் ஆய்வில் வீடியோ கேம் விளையாடுபவர்களின் சராசரி வயது 30 என கணித்துள்ளது.
9. வீடியோ கேம்கள் மனிதர்க்கு செய்யும் உதவி!

வீடியோ கேம்கள் ஒரு தனிநபரின் முக்கியமான வாழ்க்கை முடிவுகளை விரைவாகவும் சிறப்பாகவும் எடுக்க உதவுகின்றது. இது ரோச்செஸ்டர் பல்கலைக்கழக அறிவாற்றல் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உண்மை. அவர்கள் கண்டுபிடித்ததாவது, வீடியோ கேம் விளையாடுபவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் உயர்ந்த உணர்திறன் கொண்டவர்களாக இருப்பதாகவும் அதை அவர்கள் அன்றாட நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. முக்கியமாக பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது, சிறிய எழுத்துக்களை ஆர்வத்துடன் வாசிப்பது, ஒரு பெரிய கூட்டத்திலும் தனது நண்பர்களைக் கண்காணிப்பது, தெரியாத இடங்களிலும் தான் போக வேண்டிய பாதையை கண்டுபிடிப்பது போன்ற நேரங்களில் விரைவாக செயல்படுகின்றனர்.
10. தென் கொரியா நள்ளிரவில் வீடியோ கேம் விளையாடுவதை தடை செய்தது!

2011 ஆம் ஆண்டில் தென் கொரியா சிண்ட்ரெல்லா (Cinderella) எனும் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டமாவது 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ஆன்லைன் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை என்பதாகும். மொபைல்களில் மற்றும் Play Station இல் விளையாடுவது தடை செய்யப்படவில்லை. குழந்தையின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சட்டத்தை தம் வீட்டில் நீக்கிக்கொள்ளலாம். இந்த சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் சில குழந்தைகள் சட்டத்தை மீறி குடியேற்ற பதிவு எண்களை திருடி விளையாட ஆரம்பித்தனர். சில நாட்களில் இச்சட்டம் நீக்கப்பட்டது.